சிக்மக்ளூர் மார்ச் 13, 2026: கர்நாடகாவில் உள்ள சிக்மக்ளூர் மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணி நிலையத்தில் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலத்தின் அனைத்து ஆயர்களும் ஒன்றுகூடி ஆண்டுத்தியானத்தை மேற்கொண்டனர்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களுக்கு இன்னும் மிகுந்த பேரார்வத்தோடும் அர்ப்பணிப்போடும் தங்களுடைய மேய்ப்புப்பணியை ஆற்றுவதற்கு ஒரு சிறந்த நல்வாய்ப்பாக அனைத்து ஆயர்களும் இப்புனிதமான நேரத்தை ஒவ்வொர் ஆண்டு ஒன்றுகூடி சகோதரத்துவ தோழமை உணர்வுடன் மேற்கொள்கின்றனர். இந்நாட்கள் ஆழ்நிலை தியானம், அமைதி, ஆழ்நிலை சிந்தனை, ஆன்மிகப் பகிர்வு, இறைமக்களுக்கான தொண்டாற்றுவதற்கு வழிகாட்டுதல் சிந்தனைகள் என்று ஆன்மீக ஆழ்நிலை அனுபவமாக அமைந்தன. புனித சலேசியார் மறைப்பரப்பு சபையின் அருட்பணியாளர் ஜேக்கப் பாரப்பள்ளி MSFS அவர்கள் இவ்வாண்டுத் தியானத்தை வழிநடத்தினார். இந்தியாவிலேயே ஒரு சில மாநிலங்களில் அம்மாநில ஆயர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐந்து நாட்கள் கொண்ட ஆண்டுத்தியானத்தை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஆயர்கள் ஆண்டுக் கூட்டம் ஆண்டு இடைநிலைக் கூட்டம் என்று ஒன்றிணைவதைத் தவிர ஆண்டுத்தியானத்திற்காக ஆன்மீக உணர்வுடன் ஒன்றிணைவதில்லை. இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த ஆயர்நிலை ஆண்டுத்தியானம் மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றால் அது மிகையன்று.
