செக்கெந்திரபாத் மார்ச் 13,2026: ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் செயின்ட் மேரிஸ் பார்மஸி கல்லூரியின் நுழைவாயிலருகில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருச் சுருபத்தை அதிகாலை 3 மணிக்கு முக மூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு உடைத்தெறிந்தனர். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதியப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அருகில் கிடந்த சிறிய கல்லை எடுத்து, அன்னை மரியாவின் திருச்சுருபத்தைப் பாதுகாக்கும் வெளிப்புறக் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்துகின்றனர். அது முடியாத பட்சத்தில் ஒரு பெரிய கல்லை எடுத்து கண்ணாடிப் பேழையை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னை மரியா திருச்சுருபத்தை அகற்றி, தரையில் போட்டு மற்றுமொரு கல்லைக் கொண்டு சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர். அவர்கள் இதனை நன்கு திட்டமிட்டு செய்வதை சிசிடிவி கேமராப் பதிவு காட்டுகிறது. அவர்களுடைய இரு சக்கர வாகனத்தின் நம்பர் ப்ளேட்டை மறைத்து இந்தச் செயலைச் செய்திருக்கின்றனர்.

இதனை ஹைதராபாத் கத்தோலிக்கச் சங்கம் வன்மையாகக் கண்டித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யும்படியும் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்புத் தரக் கோரியும் தெலுங்கான அரசை வலியுறுத்தியுள்ளது. காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்து விசாரனையைத் தொடங்கியுள்ளனர்.

