கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த பக்தர்களின் பங்கேற்போடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியாவில் இருந்து 3,996 பக்தர்கள், இலங்கையில் இருந்து சுமார் 7,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் என மொத்தம் 12,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுவாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் சராசரியாக 6,000 – 7,000 பக்தர்கள் தான் கலந்து கொள்வார்கள்.

கச்சத்தீவு வரலாற்றிலேயே அதிக பக்தர்கள் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை.
கச்சத்தீவு எல்லையை சுற்றி வழக்கம் போல இலங்கை கொடி நடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் படகுகளில் இந்திய நாட்டின் கொடி இருக்கும். இந்த முறை ஒரு படகில் கூட இந்திய கொடி இல்லை.
கச்சத்தீவு திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும் நிதி வழங்குகிறது. அதன்படி இந்தாண்டும் ரூ.1 கோடி நிதி பங்களித்துள்ளது. ஆனாலும் நட்புணர்வின் அடிப்படையில் கூட இந்தியா கொடி எங்கும் இடம் பெறவில்லை.
கச்சத்தீவு இந்தியா வசம் இருந்தபோது அந்தோணியார் திருவிழாவுக்கு பெரும்பாலும் நம் நாட்டு பக்தர்கள் தான் அதிகம் செல்வார்கள். இலங்கை வசம் சென்ற பிறகு இரண்டு நாடுகளில் இருந்தும் சரி சமமாக பக்தர்கள் பங்கேற்று வந்தனர். முதல்முறையாக இலங்கையில் இருந்து அதிக பக்தர்களுக்கு அதிகளவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சிங்கள பக்தர்களும் அதிகளவு வந்திருந்தனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மொழியில் மட்டுமே கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு வந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள மொழியிலும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியர்களை உள்ளே அனுமதிப்பதில் தொடங்கி, கச்சத்தீவில் இருந்து புறப்படும் வரை எல்லாவற்றிலும் இலங்கை ராணுவம் மிகுந்த கெடுபிடியுடன் நடந்துகொண்டதைக் கண்டு இந்திய பக்தர்கள் மிகவும் கவலையடைந்தனர்.
இந்திய பக்தர்கள் உள்ளே செல்லும்போது தொடங்கி, அங்கிருந்து புறப்படும் வரை பல வகையில் இலங்கை ராணுவத்தின் அடக்குமுறையை எதிர் கொண்டனர். பக்தர்களை முட்டித்தள்ளி, அடிக்கவும் பாய்ந்தனர்.

இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் கச்சத்தீவு வரும் எண்ணத்தையே மக்கள் விட்டுவிடுவார்கள் என்று பலரும் நேரடியாக தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தி சென்றனர். “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. யாராலும் மீட்க முடியாது” என அங்கு வந்த இலங்கை அமைச்சர் ராமலிங்கம் திட்டவட்டமாக கூறினார்.
கச்சத்தீவு உரிமையில் இரண்டு நாடுகள் இடையே அரசியல் இருந்தாலும், தங்கள் தொப்புகள் கொடி உறவுகளை சந்தித்து அன்பைப் பரிமாறும் ஒரு நிகழ்வாகவும் இதை இரு நாட்டு பக்தர்கள் பார்கின்றனர். கடலைமிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஒருவர் மற்றவருக்கு பகிர்ந்து கொள்வதும் ஒன்றாக உணவு அருந்துவம் உண்டு.
இத்திருவிழாவில் இருநாட்டு மக்களிடையே பண்டமாற்றம் நடக்கும். கூடவே இருவரும் எடுத்து வரும் உணவையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வார்கள். இந்த முறையும் அந்த அன்புப் பரிமாற்றம் நிகழ்ந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிலும் இந்திய பக்தர்களின் வருகையை படிப்படியாக குறைத்து, இலங்கை மக்களை மட்டுமே வைத்து நடத்தும் எண்ணம் இலங்கை அரசுக்கு வந்துள்ளதாகவே நம் பக்தர்கள் அச்சப்படுவது உண்மை. ஆகையால் தமிழக அரசும் இந்திய அரசும் இந்திய தமிழக பக்தர்கள் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் வரும் ஆண்டுகளில் பங்கேற்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு தமிழக சிறுபான்மை விரோத மனப்பான்மையை விட்டுவிட்டு நம் உரிமையை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும்.

