சென்னை மார்ச் 13: ïசென்னை அசோக் நகரில் உள்ள புனித அசிசியார்பங்கு ஆலயத்தில் மேற்கு ஆசியப் பகுதியில் நடைபெறும் போர்ச் சூழல் ஓய்ந்து அமைதி திரும்ப ஆலய வளாகத்தில் அமைதிக்கான வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் நூற்றக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்கான தங்களின் தோழமையை வெளிகாட்டுகின்றனர்.
புனித பிரான்சிஸ் அசிசியாருடைய உலக அமைதிக்கான செபம் பல்வேறு சமயங்களைக் கடந்து ஆன்மீக ரீதியில் ஒற்றுமைப்படுத்தும் செபம். அவரது பிறப்பின் 800 ஆவது ஜூபிலி விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இந்த அமைதி வளையம் சென்னை மக்களிடையே முன்மாதிரியாகவும் எல்லா ஆன்மிகத் தலங்களிலும் அமைக்கப்பட வேண்டியதொன்றாகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த அமைதி வளையத்தில் இரவு பகல் பாராமல் இறைமக்களும் சமய நல்லிணக்கத்துடன் பொதுமக்களும் ஒன்று கூடி தங்களுடைய ஆன்மீகத் தோழமையையும் உலக அமைதிக்கான தங்களின் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

உலக அமைதிக்காக வரும் ஞாயிறன்று மார்ச் 8 ஆம் தேதி செபிக்கும் ஞாயிறாகவும் வரும் வெள்ளியன்று மார்ச் 13 ஆம் தேதி உண்ணா நோன்பு கடைபிடிக்கும் வெள்ளியாகவும் மார்ச் 8 ஆம்தேதி முதல் 14 ஆம் தேதி வரை திருச் செபமாலை செபிக்கும் வகையிலும் அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இறைமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஒவ்வொரு பங்கிலும் ஆன்மீக அமைதி வளையத்தை பங்கு வளாகத்தில் அமைத்து சாதி மத இன வேற்றுமை கடந்து அனைவரும் ஒரு நிமிடம் உலக அமைதிக்காக செபிக்கலாம்.
இந்த அமைதி வளையம் என்ற முன்னெடுப்பை அசோக் நகர் பங்குத்தந்தை தைனிஸ் க.ச அவர்களின் தலைமையில் அனைத்து கப்புச்சின் சபை குருக்களும் இறைமக்களும் எடுத்துள்ளனர்.
இப்படிப்பட்ட உங்கள் கிறிஸ்தவச் செய்திகளும் ஆன்மீகக் கட்டுரைகளும் சிந்தனைகளும் இடம் பெற தொடர்புக்கொள்க catholicstamil@gmail.com அல்லது வாட்ஸ்அப் 0091 91767 3 22 44

