தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவின் துணையுடன் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டுக் கிறிஸ்தவரான கிறிஸ்டோபர் திலக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ்காரரான திரு.கிறிஸ்டோபர் திலக் என்ற இவர், திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களைப் போன்று எல்லாரும் அறிந்த முகம் அல்ல. கிறிஸ்டோபர் திலக் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே தமிழக அளவிலும் இந்திய அளவிலும் யார் இவர் என்று புருவங்கள் உயர்ந்தன.

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

கிறிஸ்டோபர் திலக்கின் பூர்விகம் சொந்த ஊர் தாராபுரம் ஆகும். தற்போது இவர் திருச்சியில் வசித்து வருகிறார்.  இவரின் தந்தை புகழ்ப்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் திரு.மாணிக்கம். காமராசர் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான இவரது தந்தை தமிழ்நாட்டின் வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

தந்தையின் பேராசிரியப் பணி காரணமாக இவரது குடும்பம் மதுரையில் வசித்தது. திமுக பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. அழகிரியின் வீட்டிற்கு அருகிலேயே வசித்ததால் இரு குடும்பத்திற்கும் இடையே நட்புணர்வு உண்டு. ஆகையால் இவரது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு அனைத்தும் மதுரையில்தான் நடைபெற்றது. மதுரை தியாகராஜா கல்லூரியில் பொறியியல் மற்றும் எம்பிஏ மேலாண்மை உள்ளிட்ட உயர்கல்வியைக் கற்றார். உயர்கல்வி முடித்த பிறகு வெளிநாட்டில் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றினார். இந்த நிலையில் காந்தியக் கொள்கையின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது வெளிநாட்டுவேலையை உதறிவிட்டு காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தனது கடினாமான உழைப்பின் காரணமாக ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கேயின் நம்பிக்கைக்குரியவர்களின் ஒருவராக தன்னை வளர்த்துக்கொண்டார். படிப்படியாக வளர்ந்து தந்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களும் ஒருவராக உயர்ந்தார்.

தற்போது நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து தற்போது டாடா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்று கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

உம்மன் சாண்டியின் உற்றத் துணை

அடிப்படையில் காந்தியக் கொள்கையின்மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், அரசியல் ரீதியாக அவருக்கு அரசியல் குருவாக விளங்கியவர்  கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி. கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்ந்த பணியாற்றிய போது அவரது பேரன்பைப் பெற்றவராக விளங்கினாhர். எந்த அளவுக்கு என்றால் திரு.உம்மன் சாண்டி அவர்கள் தன்னுடைய சொந்த மகன் சாண்டி உம்மனைப் போல கிறிஸ்டோபர் திலக்கைப் பார்த்துக்கொண்டார்.

திரு.உம்மன் சாண்டி அவர்களை காங்கிரஸ் கட்சித் தலைமை ஆந்திராவுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமித்தபோது, கிறிஸ்டோபர் திலக் தனக்கு உதவியாளராக வந்தால் தன்னால் அப்பணியைச் சிறப்பாக செய்ய முடியும் என்று சொல்லி அவரை தன் கட்சிப் பணிக்கு கேட்டுப்பெற்றார்.  அந்த அளவுக்கு தன் கடின உழைப்பாலும் அணுகுமுறையாலும் கவர்ந்திழுத்தார்.

அவரின் மறைவுக்குப்பிறகும், ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை, ஒய்.எஸ் ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வந்ததில் கிறிஸ்டோபர் திலக்கின் பங்கு முக்கியமானது. அடுத்ததாக, தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த ஒடிசா மாநிலத்திலும் தேர்தல் பொறுப்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பாக தேர்தல் பணி பார்த்திருக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக…

தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக, குறிப்பாக மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் பணியாற்றி வருகிறார். வடகிழக்கு மாநிலங்களுக்கு பொறுப்பாளராகச் செல்ல, கட்சியில் பலர் தயங்கிய நிலையில், தானாக முன்வந்து சென்றிருக்கிறார். மக்களோடு மக்களாக தங்கி வேலை செய்வது இவரின் சிறப்பு ஆகும்.

பன்முகக் கலைஞர்

அரசியலைத் தாண்டி பல்வேறு திறமைகளுக்குச் சொந்தக்காரர் இவர்.  நல்ல பாடகர். சிறந்த ஹாக்கி வீரர். இவரின் அம்மா வழி தாத்தா திருச்சி ஆல் இன்டியா ரேடியோவில் ’ஏ’ கிரேட் ஆர்டிஸ்டாக இருந்தவர். அந்தவகையில், கிறிஸ்டோபர் திலக்கும் முறையாக கர்நாட்டிக் சங்கீதம் பயின்றவர். மிகச்சிறந்த பாடகர் என்பது அவரின் சமூக வலைதளப் பக்கங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.

அதேபோல, தியாகராஜா கல்லூரியில் பொறியியல் படிக்கும்போது, மாநில அளவில் ஹாக்கி போட்டிகளிலும் பங்குகொண்டு விளையாடியிருக்கிறார்.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் காந்தியக் கொள்கைகளை மிகத் தீவிரமாகப் பின்பற்றுபவர்களில் ஒருவர் என கிறிஸ்டோபர் திலக்கைக் குறிப்பிடுகிறார்கள்.

எளிமையான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிப்பதாகச் சொல்கிறார்கள். அம்பேத்கர் மீதும் தீவிர ஈடுபாடு கொண்டவராகப் பார்க்கப்படுகிறார். தவிர, அறிவுசார் வட்டங்களில் அதிகளவில் மதிக்கப்படுவராக கிறிஸ்டோபர் திலக் இருக்கிறார். தவிர, மனித உரிமை சார்ந்த சமூக செயற்பாட்டளர் என்கிற அடையாளமும் அவருக்கு இருக்கிறது.!

காந்தியவாதி, அம்பேத்காரியவாதி, மனித உரிமைப் போராளி, தேர்தல் வியூக அணிப் பொறுப்பாளர், கர்நாடக இசைப் பாடகர், ஹாக்கி வீரர், பொறியாளர், நிர்வாகப் பண்பு மிக்கவர் என்று பல்வேறு அடையாளங்களையும் நற்குணங்களையும் தனதாக்கி உலகிற்கு ஒளியாக சாரமுள்ள உப்பாக உள்ள திரு.கிறிஸ்டோபர் திலக் ஒரு கிறிஸ்தவ சிறுபான்மையினர் என்பதில் ஒட்மொத்த திருஅவைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் ஏன் தமிழகத்திற்கே பெருமை..

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வரும் புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு.வில்சன் (திமுக) அவர்களோடு இணைந்து திமுகவின் சார்பில் திரு. கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் அவர்களும் காங்கிரஸ் சார்பில் திரு.கிறிஸ்டோபர் திலக் அவர்களும் தமிழகத்தின் பிரதிநிதியாகவும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் அடையாளமாகவும் அரசியல் முகமாகவும் பணியாற்றுவது சிறுபான்மை மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை தந்துள்ளது. இதனால் நாம் தமிழர் சீமான் தாவெகவின் விஜய் ஆகியோரை நோக்கி  கிறிஸ்தவர்களும் மீனவர்களும் மதச்சிறுபான்மையினரும் செல்வது மிகவும் குறையும் என்று நம்பப்படுகிறது.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.