2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழின் மூத்த படைப்பாளியும், கலை இலக்கியச் செயற்பாட்டாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் எழுதிய `தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

ச.தமிழ்ச்செல்வன் ‘கதை சொல்லிகளின் கதை’ என்ற தலைப்பில், 2017 நவம்பர் முதல் செப்டம்பர் 2018 வரை விகடன் இணையதளத்தில் எழுதிய தொடரின் முழுமை பெற்ற வடிவமே `தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூல். இந்த நூலில் வ.வே.சு அய்யர் தொடங்கி கந்தர்வன் வரை 50 எழுத்தாளர்களின் படைப்புகளை தன் பார்வையிலிருந்து இளம் தலைமுறைக்கு அறிமுகம் செய்கிறார் தமிழ்ச்செல்வன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இலக்கிய விமர்சனம்’ என்ற வகைமையின் கீழ் இந்த விருதை தமிழ்ச்செல்வனுக்கு வழங்கியிருக்கிறது, சாகித்ய அகாடமி.

ச.தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் 27.5.1954-ல் பிறந்தவர். இவரது தாத்தா, மதுரகவி பாஸ்கரதாஸ் பிரபலமான நாடகவியலாளர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் ஆசிரியர். அப்பா எம்.எஸ்.சண்முகம் எழுத்தாளர். பல திராவிட இயக்க இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன, அம்மா பெயர், சரஸ்வதி. எழுத்தாளர் கோணங்கி, நாடகவியலாளர் முருகபூபதி ஆகியோர் தமிழ்ச்செல்வனின் சகோதரர்கள்.

குடும்பத்தில் இயல்பாக இருந்த வாசிப்புப் பழக்கம் சிறுவயதிலேயே தமிழ்ச்செல்வனையும் தொற்றிக்கொண்டது. தொடர் வாசிப்பு, எழுதும் வேட்கையைத் தூண்டியது. இவரது முதல் கவிதை ‘நீலக்குயில்’ என்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. முதல் சிறுகதை, ‘தாமரை’ இதழில் வந்தது. அஞ்சல் துறையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வன், பிறகு ராணுவத்தில் இணைந்து இந்திய-சீன எல்லையில் பணி புரிந்தார். பிறகு ராணுவத்தில் இருந்து வந்து அஞ்சல் துறையில் இணைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று ஏராளமான இளைஞர்களை அந்த அமைப்பு நோக்கி ஈர்த்ததில் தமிழ்ச்செல்வனின் பங்கு அளப்பரியது. அறிவொளி இயக்கத்திலும் பங்கேற்று கிராமம் கிராமமாகப்போய் கற்றலின் தேவை குறித்து விழிப்புணர்வூட்டினார். அதற்கென சிறு சிறு நூல்களையும் ஏராளமான பாடல்களையும் எழுதினார் தமிழ்ச்செல்வன். இயக்கப் பணிகளுக்காகவே அஞ்சல் துறைப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.