வேளாங்கண்ணி, மார்ச் 15, 2026: திருஅவையின் சமூகப் பணிகளையும் ஏழைகளுக்கான சேவைகளையும் வலுப்படுத்தும் நோக்கில், நிதி திரட்டுதல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த ஐந்து நாள் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தியான மையத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு துறவற சபைகள் மற்றும் மறைமாவட்டங்களைச் சேர்ந்த 73 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியை தளிர் கப்புச்சின் மையம் ஏற்பாடு செய்திருந்தது, அருள்பணி. நித்திய சகாயம் இதனை வழிநடத்தினார்.
திட்டமிடல், நிதி திரட்டுதல் மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முன்முயற்சிகளில் திருஅவை தலைவர்களுக்கு நடைமுறைத் திறன்களை வழங்கும் வகையில் இந்தப் பயிற்சி அமைந்திருந்தது. இதில் பல மாகாணத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டது, திருஅவை தனது சமூகப் பணிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியது.
அருள்பணி. நித்திய சகாயம் டாக்டர் லூகாஸ் அருள்சகோதரி ஏக்தா ஆகியோர் பயிற்சி வகுப்புகளை நடத்தினர். பங்கேற்பாளர்கள் குழுக்களாக இணைந்து, முறையான திட்டமிடல் வழிமுறைகளைப் பயன்படுத்தி திட்ட முன்மொழிவுகளை உருவாக்கினர்.
பயிற்சிக்கல்வி அமர்வுகளுடன் பங்கேற்பாளர்கள் ஆன்மீகப் புதுப்பித்தல் தருணங்களையும் அனுபவித்தனர். தினசரி ஜெபம், திருத்தலத்தில் திருப்பலி மற்றும் சிலுவைப் பாதை ஆகியவை இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அமைந்தன.
திருஅவையின் சமூகப் பணியை வலுப்படுத்தவும், ஏழைகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் மிகுந்த திறன் மற்றும் கருணையுடன் தொடர்ந்து சேவை செய்யவும் பங்கேற்பாளர்கள் தங்களை மீண்டும் அர்ப்பணித்துக்கொண்டதுடன் இந்த தேசியப் பயிற்சிப் பட்டறை நிறைவடைந்தது
