மார்ச் 16, 2026: மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் குக்கி-ஸோ பழங்குடியினப் பெண்கள் இருவர், ஒரு வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பயங்கரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரரும் தந்தையும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர், இருவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது, மேலும் ஒருவரின் பிணை மனுவை இந்த மாத இறுதியில் இந்திய உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

கொல்லப்பட்ட இருவரையும் தாக்கியதாக சந்தேகப்படும் முக்கிய நபரான லோயா என்பவர் இன்னும் பிடிபடவில்லை அவரை கைது செய்ய முறையான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. அவர் குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது.

2023 ஜூலையில் ஒரு சிறுவன் உட்பட ஏழு பேரை மணிப்பூர் காவல்துறை கைது செய்தது. ஆனால் இருவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற முக்கிய குற்றவாளி லோயா கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.

மே 3, 2023 அன்று மணிப்பூரில் குக்கி-ஸோ மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையே இனக்கலவரம் வெடித்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் காங்க்போக்பி மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்திலிருந்து வெளியேறினர். அடுத்த நாள் சுமார் 1,000 பேர் கொண்ட கும்பல் அவர்கள் கிராமத்தைத் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், லோயா ஒரு பெரிய மரக்கட்டையால் ஒரு பெண்ணின் சகோதரரையும் தந்தையையும் அடித்துக் கொன்றதோடு, பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சிங்லென் மற்றும் இனாடோன் ஆகிய மற்ற இரு குற்றவாளிகளும் தலைமறைவாக உள்ளனர்.

இந்தச் சம்பவம் மே 4, 2023 அன்று நடந்தாலும், ஜூலை 19 அன்று அது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியான பிறகே நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. பாதிக்கப்பட்டவர்கள் மணிப்பூரின் பள்ளத்தாக்கு பகுதிகளுக்குச் செல்ல முடியாத சூழல் இருந்ததால், விசாரணை குவஹாத்திக்கு மாற்றப்பட்டது. செப்டம்பர் 8, 2025 அன்று, கௌஹாத்தி உயர் நீதிமன்றம் நமிராக்பம் கிரண் மெய்தி மற்றும் அருண் குண்டோங்பம் ஆகிய இருவருக்குப் பிணை வழங்கியது.

குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை ஒப்புக்கொண்ட நீதிமன்றம், விசாரணை இன்றி நீண்ட காலம் சிறையில் அடைப்பது தண்டனையாக அமையக் கூடாது என்று குறிப்பிட்டது. சிபிஐ குற்றப்பத்திரிகையின்படி, குண்டோங்பம் அந்த கும்பலில் ஒருவராக இருந்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். கிரண் மெய்தி குற்றத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதல் காணொளியைப் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டினர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் பெண்களுக்கு உதவவில்லை என்றும், வண்டி சாவி இல்லை என்று கூறிவிட்டு அவர்களைக் கும்பலிடம் விட்டுச் சென்றதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் 48 மணிநேரம் காடுகளில் தப்பிச் சென்று பாதுகாப்பான இடத்தைச் அடைந்தனர். காணொளி வெளியான பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையினரின் பங்கு குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மற்றொரு குற்றவாளியான யும்லெம்பம் ஜிபன் சிங், தனது பிணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதன் விசாரணை மார்ச் 24 அன்று நடைபெற உள்ளது. ஹுய்ரெம் ஹெரோதாஷ் மெய்தி, நிங்கோம்பம் தோம்பா சிங் மற்றும் புக்ரிஹொங்பம் சுரஞ்சோய் மெய்தி ஆகிய மூவர் இன்னும் காவலில் உள்ளனர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி தத்தாத்ரேய பட்சல்கிகர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 36 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 31 முக்கிய வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, அதில் 20 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.