மார்ச் 11, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு ’மக்களினங்களின் ஒளி’ என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஆவணத்தில், இரண்டாம் அதிகாரத்தில் உள்ள “இறைமக்கள்” என்ற தலைப்பில் இந்நாளில் தனது சிந்தனைகளை திருத்தந்தை திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

முதலில் இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.

அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். (எரே 31:33)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

உலகையும் மனிதகுலத்தையும் படைத்த கடவுள், ஒவ்வொரு மனிதரையும் மீட்க விரும்புகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடையே குடிகொள்வதன் மூலம் வரலாற்றில் தமது மீட்புப் பணியை நிறைவேற்றுகிறார். இதன் காரணமாகவே, அவர் ஆபிரகாமை அழைத்து, வானத்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் எண்ணற்ற வழிமரபினரை அவருக்கு அளிப்பதாக வாக்களிக்கிறார் (காண்க தொ. நூ 22:17-18)

ஆபிரகாமின் பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து மீட்ட பிறகு, கடவுள் அவர்களோடு ஓர் உடன்படிக்கையைச் செய்துகொள்கிறார். அவர்களோடு பயணிக்கிறார், அவர்களைப் பராமரிக்கிறார். மேலும் அவர்கள் வழிதவறிச் செல்லும் போதெல்லாம் அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கிறார். எனவே, இந்த மக்களின் அடையாளம் என்பது கடவுளின் செயல் மற்றும் அவர் மீது கொள்ளும் நம்பிக்கையால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு ஒரு ஒளியாகத் திகழவும், அனைத்து மக்களையும், ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் தன்பால் ஈர்க்கும் ஒரு கலங்கரை விளக்கத்தைப் போல செயல்படவும் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் (காண்க எசா 2:1-5 ).

“கிறிஸ்துவோடு செய்யப்படவிருந்த அந்தப் புதிய மற்றும் நிறைவான உடன்படிக்கைக்கும், மனிதரான கடவுளின் வாக்கு அளிக்கப்படவிருந்த அந்த முழுமையான வெளிப்பாட்டிற்கும், ஒரு தயாரிப்பாகவும் முன்னோடியாகவுமே இவை அனைத்தும் நிகழ்ந்தன என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுகிறது” (டுழு, 9).

உண்மையில், கிறிஸ்துவே தமது உடல் மற்றும் இரத்தத்தை கையளிப்பதன் மூலம், இந்த மக்களை ஒரு நிலையான வழியில் தம்மோடு இணைத்து கொள்கிறார். இந்த இறைச்சமூகம் இப்போது ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்த தனிநபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மீதான நம்பிக்கையாலும், அவரோடு இணைந்திருப்பதாலும் மற்றும் உயிர்த்தெழுந்தவரின் ஆவியால் இயக்கப்படுவதாலும் அவரது வாழ்வையே வாழ்வதாலும் இம்மக்கள் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். இதுவே திருஅவை. கிறிஸ்துவின் உடலில் இருந்து தங்களது வாழ்வைப் பெற்று, தாங்களே கிறிஸ்துவின் உடலாகவும் விளங்குகின்ற இறைமக்கள்; மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்ல, மாறாக இவர்கள் கடவுளால் அழைக்கப்பட்டு, உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த ஆண்களாலும் பெண்களாலும் உருவாக்கப்பட்ட இறைமக்கள் இவர்களே. (டுழு, 9)

இம்மக்களை ஒன்றிணைக்கும் அடிப்படைக் கொள்கை என்பது ஒரு மொழியோ, ஒரு பண்பாடோ அல்லது ஒரு இனமோ அல்ல. மாறாக கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள விசுவாசமே ஆகும். எனவே, திருஅவை என்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் கூற்றின்படி “விசுவாசத்தோடு இயேசுவை நோக்குகின்றவர்களின் கூட்டமைப்பு” ஆகும்.  (டுழு, 9)

இது ஒரு மெசியாவின் இறைச் சமூகமாகும். ஏனெனில், மெசியாவாகிய கிறிஸ்துவே இதற்குத் தலைவராக இருக்கிறார். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ள எந்தத் தகுதியோ அல்லது பட்டமோ கொண்டிருக்கவில்லை. மாறாக, கிறிஸ்துவின் வழியாகவும் அவரோடும் இணைந்து, ’கடவுளின் பிள்ளைகளாக’ இருக்கும் அந்த அருட்கொடையை மட்டுமே அவர்கள் கொண்டுள்ளனர்.

எனவே, திருஅவையில் எந்தவொரு பணிக்கும் அல்லது பொறுப்பிற்கும் முன்னதாக, கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருப்பதும் , அருளின் வழியாகக் கடவுளின் பிள்ளைகளாய் இருப்பதுமே உண்மையில் முக்கியமானதாகும்.கிறிஸ்தவர்களாகிய நாம் தேட வேண்டிய ஒரு மதிப்பிற்குரிய பட்டமும் இதுவே ஆகும்.

தந்தையிடமிருந்து தொடர்ந்து வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கும், அவருடைய பிள்ளைகளாகவும் சகோதர சகோதரிகளாகவும் வாழ்வதற்கே நாம் திருஅவையில் இருக்கிறோம். இதன் விளைவாக, திருஅவைக்குள் உறவுகளை இயக்குகின்ற சட்டம் “அன்பு”  என்பது புலப்படுகிறது. இந்த அன்பை நாம் இயேசுவில் பெற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம். மேலும், இதன் இலக்கு “இறையாட்சி ” ஆகும்; அதனை நோக்கியே திரு அவை ஒட்டுமொத்த மனிதகுலத்தோடும் இணைந்து பயணம் செய்கிறது.

எனவே, இந்த இறைச் சமூகம் என்றும் ஒன்றாக, தனித்துவமாக நிலைத்திருக்க வேண்டும். அதேவேளை, இது உலகம் முழுவதற்கும், எல்லா காலங்களுக்கும் விரிவடைய வேண்டும். இதன் மூலமே கடவுளின் திருவுளம் நிறைவேறும். ஏனெனில், அவர் தொடக்கத்தில் மனித இயல்பை ஒன்றாகவே படைத்தார், மேலும் சிதறுண்டு போயிருந்த தம் பிள்ளைகளை மீண்டும் ஒன்றாக இணைக்கவே அவர் விரும்புகிறார்.

அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்டவரும் மீட்பருமாகிய கிறிஸ்துவில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள திருஅவை ஒருபோதும் தனக்குள்ளேயே முடங்கிவிட முடியாது. மாறாக, அது அனைவருக்கும் திறந்த மனதுடனும், அனைவருக்குமானதாகவும் விளங்குகிறது. திருஅவை கிறிஸ்துவை நம்பும் நம்பிக்கையாளர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், “எல்லா மனிதர்களும் கடவுளின் புதிய மக்கள் கூட்டமாக உருவெடுக்க அழைக்கப்படுகிறார்கள்” என்பதைப் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நமக்கு நினைவூட்டுகிறது (டுழு, 13).

எனவே, நற்செய்தியை இன்னும் அறிந்திராதவர்கள் கூட, ஏதோ ஒரு வகையில் திருஅவையையே சார்ந்திருக்கிறார்கள். ஆகவே, கிறிஸ்துவின் திருத்தூதுப் பணியில் இணைந்து செயல்படும் திருஅவை, நற்செய்தியை எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் அறிவிக்க அழைக்கப்படுகிறது (டுழு, 17 ). இதன் மூலம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை நேரில் கண்டறிய  முடியும்.  திருஅவையில் அனைவருக்கும் இடம் உண்டு, அவ்வாறு இருக்கவும் வேண்டும். மேலும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் தாங்கள் வாழும் மற்றும் பணியாற்றும் எல்லாச் சூழல்களிலும் நற்செய்தியை அறிவிக்கவும், அதற்குச் சாட்சிகளாகத் திகழவும் அழைக்கப்படுகிறார்கள்” என்பதே இதன் பொருள் ஆகும். “இவ்வாறுதான் திருஅவை தனது கத்தோலிக்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது. பல்வேறு கலாச்சாரங்களின் வளமையையும் வளங்களையும் ஏற்றுக்கொள்ளும், அதேவேளையில், நற்செய்தியின் புதுமையை அவர்களுக்கு வழங்கி, அவற்றைத் தூய்மைப்படுத்தவும் மேம்படுத்தவும் செய்கிறது” (டுழு, 13 ).

“இந்த அடிப்படையில், திருஅவை என்பது ஒன்றாக இருந்தாலும் அது அனைவரையும் உள்ளடக்கியது. ’தனித்துவமான மீட்பின் பேழை, அதன் பரந்த உட்பகுதியில் அனைத்து மனிதப் பன்முகத்தன்மைகளையும் வரவேற்க வேண்டும் என்று இறையியலாளர் ஒருவர் இதனை இவ்வாறு விவரித்தார்.

ஓர் உணவுக்கூடாரம் பலப் படைப்புகளிலிருந்தும் தனது உணவைப் பெறுவது போல, திரு அவையும் ஒன்றாகவே செயல்படுகிறது  கிறிஸ்துவின் தையல் இல்லாத மேலாடையைப் போல ஒற்றுமையாக இருந்தாலும், அது பல வண்ணங்களைக் கொண்ட யோசேப்பின் அங்கியைப் போன்று இருக்கிறது.” இங்கு ஒற்றுமையும் பன்முகத்தன்மையும் வலியுறுத்தப்படுகிறது.

“பல மோதல்களாலும் போர்களாலும் சூழப்பட்டுள்ள இந்த நாட்களில் விசுவாசத்தின் அடிப்படையில், பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு சமூகமாகத் திருஅவை  திகழ்கிறது என்பதை அறிவது  ஒரு மிகப்பெரிய நம்பிக்கையின் அடையாளமாகும்.”

“இது மனிதகுலத்தின் மையமாக வைக்கப்பட்டிருக்கும் ஓர் அடையாளம் ஆகும். தந்தை கடவுள் தம்முடைய பிள்ளைகள் அனைவரையும் அழைக்கின்ற அந்த ஒன்றிப்பு  மற்றும் அமைதிக்கான ஓர் அழைப்பாகவும், முன்னறிவிப்பாகவும் இது அமைகிறது.”

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.