“உண்மையான அமைதி என்பது, அரசியல் ஒப்பந்தங்கள் அல்லது தூதரக உறவுகள் அல்லது இராணுவ உத்திகளிலிருந்து மட்டுமல்ல, மனத்தாழ்மையுடன் வாழ துணிவு காணும் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்தும் பிறக்கிறது” என்று கப்புச்சின் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் இராபர்த்தோ பசோலினி கூறினார்.

மார்ச் 06, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் தனது முதல் தவக்கால தியானச் சிந்தனைகளை வழங்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தையின் இல்ல மறையுரையாளர் அருள்பணியாளர் பசோலினி. இந்நிகழ்வில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கலந்துகொண்டார்.

“ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்” (2 கொரி 5:17) என்ற தலைப்பை கருப்பொருளாகக் கொண்டு இவ்வாண்டிற்கான தவக்காலத் தொடர் சிந்தனைகளை அருள்பணியாளர் பசோலினி வழங்கி வருகிறார்.

“மனமாற்றம்: மனத்தாழ்மையின் பாதையில் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுதல்” என்ற தலைப்பில் அமைந்த அருள்பணியாளர் பசோலினி அவர்களின் முதல் தியான உரை, நமது தொடர்ச்சியான ஆன்மிக மாற்றத்தில் மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

“மோதல்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்ட உலகில், உண்மையான அமைதி என்பது அரசியல் அல்லது இராணுவத் தீர்வுகளிலிருந்து பிறக்கவில்லை, மாறாக மனத்தாழ்மையைத் தழுவி, வன்முறையைக் கைவிட்டு, ஆதிக்கத்திற்குப் பதிலாக உரையாடலைத் தேர்ந்தெடுக்கும் தனிநபர்களின் துணிவிலிருந்தே பிறக்கிறது” என்று எடுத்துக்காட்டினார் அவர்.

மேலும் கடவுளின் அருளுக்கு ஆழமான, நெருக்கமான வெளிப்பாடாகவும், நமக்குள் இறை உருவத்தை எழுப்புவதாகவும் நற்செய்தி அடிப்படையிலான மனமாற்றத்தை அருள்பணியாளர் பசோலினி தனது உரையில் விவரித்தார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸின் தவம் பற்றிய படிப்பினைகளிலிருந்து தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட அவர், “மனமாற்றம் என்பது தன்னம்பிக்கை பற்றியது அல்ல, மாறாக கடவுளிடம் தொடர்ந்து திரும்புவது, நலமாக்குதல் மற்றும் இரக்கத்தைத் தேடுவது” என்று விளக்கினார்.

மனத்தாழ்மைக்கும் மனமாற்றத்திற்கும் இடையிலான இன்றியமையாதத் தொடர்பை எடுத்துரைத்த அருள்பணியாளர் பசோலினி அவர்கள், புனித பிரான்சிஸ் அசிசியாரை எடுத்துக்காட்டி, “மனத்தாழ்மையைத் தழுவுவதன் வழியாகதான் உண்மையான மகத்துவம் வருகிறது” என்று குறிப்பிட்டார்.

கிறிஸ்தவப் பணிவு நம்மை சிரியவர்களாக்காது, மாறாக கடவுளின் விருப்பத்துடன் நம்மை இணைப்பதன் மூலம் நமது உண்மையான மகத்துவத்தை மீட்டெடுக்கிறது என்பதை  அருள்பணியாளர் பசோலினி விசுவாசிகளுக்கு நினைவூட்டினார்.

குறிப்பாக மோதல்களின் போது கிறிஸ்துவின் தாழ்மையான அன்பின் முன்மாதிரியைப் பின்பற்ற விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்து புனித பிரான்சிஸ் அசிசியாரின் இறைவேண்டலுடன் இன்றைய நாள் தியான உரையை  அருள்பணியாளர் பசோலினி நிறைவு செய்தார்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.