“உங்கள் கண்களைத் திறந்து, கடவுளிடமிருந்து வரும் எதிர்பாராத வியப்புக்குரிய செயல்களை அடையாளம் காணுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது திருஅவையிடம் கூறுகின்றார்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ மொழிந்தார்.

மார்ச் 08, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. யோவா 4: 5-42) மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளைப் விசுவாசிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.

விசுவாசிகள் அனைவரும் தங்களின் ஆன்மிகப் பயணத்தை ஆழப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையில் கடவுளின் உடனிருப்பிற்கான தாகத்திற்குப் பதிலளிக்கவும் திருத்தந்தை அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்  .

“கிறிஸ்துவைச் சந்திப்பது என்பது ஒரு நபரையே மாற்றக்கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்தது” என்றும், “அது நிலைவாழ்வுக்கு வழிவகுக்கும் நீரூற்றைப் போன்றது” என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசுவைச் சந்திப்பது புதிய வாழ்க்கையையும் மாற்றத்தையும் கொண்டுவருகிறது என்பதைக் காட்ட, இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்குமான உரையாடலை எடுத்துக்காட்டினார்.

நற்செய்திக்கும் அனைத்துக் கிறிஸ்தவர்களின் ஆன்மிகப் பயணத்திற்கும் இடையிலான ஒன்றிப்பை எடுத்துக்காட்டி, தவக்காலம் தனிப்பட்ட புதுப்பித்தல் மற்றும் மனந்திரும்புதலுக்கான நேரம் என்பதை திருத்தந்தை விசுவாசிகளுக்கு நினைவூட்டினார்.

எட்டி ஹில்லெசம் (Etty Hillesum) அவர்களின் நினைவேட்டை (diary) மேற்கோள் காட்டி, கடினமான காலங்களில் தெய்வீகத்தைக் கண்டுபிடிப்பதில் உள்ள சவாலை எடுத்துரைத்த திருத்தந்தை, வாழ்க்கையின் தடைகள் தங்கள் பாதையைத் தடுக்கும்போது கடவுளின் உடனிருப்பைக் கண்டுபிடிக்குமாறு விசுவாசிகளை கேட்டுக்கொண்டார்.

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நபரான சமாரியப் பெண்ணுடன் இயேசுவின் இரக்கமுள்ள தொடர்பு குறித்து விளக்கிய திருத்தந்தை, அதே உணர்திறன் மற்றும் செவிமடுக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தும்  திருஅவையின் கடமையை வலியுறுத்தினார்.

“இன்று உலகில் எத்தனை பேர் இந்த ஆன்மிக வசந்தத்தைத் தேடுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பிய திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் இரக்கத்தின் அவசியம் குறித்தும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல்வேறு திருஅவைகளுக்கு இடையிலான பிளவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருமைப்பாட்டுணர்வில்  அமைதியையும் நீதியையும் தேட விசுவாசிகளை வலியுறுத்தி, ஒன்றிப்புக்கு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

“ஆவியிலும் உண்மையிலும்” வழிபடுவதற்கான நற்செய்தியின் அழைப்பை எடுத்துக்காட்டி, உண்மைக்கும் நீதிக்கும் ஏங்குபவர்களுக்காகப் பணியாற்ற உதவிடுமாறு திருஅவையின் அன்னையாம் புனித கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்து தனது ஞாயிறு மூவேளை இறைவேண்டல் உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.