.மார்ச் 03 ஆம் தேதி செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, “உலகளவில் வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வழி காண வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
“அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள், அமைதிக்காக உழைப்போம், வெறுப்பைக் குறைப்போம்” என்று கூறிய திருத்தந்தை, அச்சுறுத்தல்கள் அல்லது ஆயுதங்களால் நிலைத்தன்மையைக் கட்டியெழுப்ப முடியாது” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட அண்மைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து இஞ்ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் தனது கரிசனையையும் அக்கறையையும் திருத்தந்தை வெளிப்படுத்தினார்.
அப்போது, “நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை நியாயமான, நேர்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் மட்டுமே அடைய முடியும், அழிவையும் துன்பத்தையும் கொண்டுவரும் ஆயுதங்கள் மூலம் அல்ல” என்று திருத்தந்தை உறுதிப்படக் கூறினார்
