பிப்ரவரி 27, வெள்ளிக்கிழமை, சிவகங்கை மறைமாவட்டம் திருவரங்கம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக 20 ஆண்டுகள் பணி செய்து திரு இருதய ஆண்டவருக்கென ஓர் ஆலயம் கட்டி இந்த கிராமத்தை உருவாக்கியவரான ஸ்டீபன் லெபோர்த் என்ற இயற்பெயர் கொண்ட முடியப்பர் சுவாமி அவர்களின் நினைவு நாளை பங்கு இறை மக்கள் நன்றி உணர்வோடு கொண்டாடினர்.
தங்கள் கிராம வளர்ச்சிக்கும் இறை நம்பிக்கைக்கும் அடித்தளமிட்ட பிரான்ஸ் நாட்டில் பிறந்து இயேசு சபை குருவாக இம்மண்ணிற்கு வந்து இறைப்பணி செய்த முடியப்பர் சுவாமி அவர்களின் மீது கொண்ட நன்றி உணர்வால் ஒவ்வொரு ஆண்டும் இறந்த அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாள் அன்று அவரது கல்லறை முன் கூடி செபிக்கின்றனர். மேலும் தங்களின் குடும்பத்தில் இறந்தவர்களுக்காக ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் முதல் பெயராக முடியப்பர் சுவாமி அவர்களின் பெயர் இடம் பெறுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு ஒரு நினைவகம் கட்டப்பட்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 25-ஆம் நாள் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு கடந்த புதன்கிழமையன்று இந்த விழாவினை இரண்டாவது ஆண்டாக கிராம மக்கள் கொண்டாடினர்.

திருவரங்கம் பங்கின் தொடக்கப் புள்ளி இந்தப் பங்கில் பணிபுரிந்த முடியப்பர் சுவாமி. இந்த ஊருக்கும் இந்த ஊர் சார்ந்த உறவுகளுக்கும் என்றும் நினைவில் நிற்கும் நபராக நெஞ்சில் நினைவில் கொண்டாடப்படுகின்ற நபராக என்றும் திகழ்கிறார் . அவர் வித்திட்ட நம்பிக்கை விதை விருட்சமாக வளர்ந்து உயர்ந்து படர்ந்து இருப்பது மகிழ்வானது. இதுவரை அவரது நினைவை மக்கள் கல்லறையில் நின்று செபித்தும், கல்லறைக்கு மலர் அணிவித்து பூக்கள் தூவியும் கொண்டாடி வந்தார்கள். இப்போது அவருக்கென்று ஒரு நினைவகம் எழுப்பப்பட்டு ஆண்டுதோறும் நினைவு கொண்டாட்டமாக ஒரு விழாவாக மாறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
