மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர்கள் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கவலை தெரிவித்து அருள்பணியாளர்களும் இறைமக்களும் இணைந்து கத்தோலிக்க ஆலயங்களைத் திறந்து திருச்செபமாலை செபிக்கவும் நற்கருணை ஆண்டவருக்கு முன்பு முழந்தாள்படியிட்டு செபிக்கவும் அழைப்புவிடுத்துள்ளார். தமிழக ஆயர் பேரவையும் அகில இந்திய ஆயர் பேரவையும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர் உடனடியாக நிறுத்தப்பட இறைமக்கள்அனைவரும் செபிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் மார்ச் மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தம் மறைமாவட்ட அருள்பணியாளர்களும் துறவியரும் இறைமக்களும் ஒரு சந்தி இருந்து (ஒருவேளை உணவு தவிர்த்து) திருத்தந்தையின் கருத்துகளுக்காகச் செபிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை தம் மறைமாவட்டத்திற்குட்பட்ட ஆலயங்களில் நடைபெறும் அனைத்து திருப்பலிகளையும் திருத்தந்தையின் போர் நிறுத்த கருத்திற்காகவும் உலக அமைதிக்காகவும் செபிக்கவும் விசுவாசிகள் மன்றாட்டுச் செபத்தில் சிறப்புக் கருத்தாக இதனை இணைத்துக் கொள்ளவும் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஒரு மாதிரி செபம் ஒன்றையும் அவர் தம் மடலில் இணைத்துள்ளார்.
வல்லமையுள்ள மூவொரு இறைவா! கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் அலகையின் சூழ்ச்சிகளை அழித்து, உலகை ஆள்பவர்களின் போர்க்குணத்தை முடக்கியருளும்.
மரியாவின் மாசற்ற இருதயமே!, உலக அமைதிக்காகவும் மாந்தர் அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழவும் மன்றாடும்.
அதிதூதரான புனித மிக்கேலே! அலகையை அடக்கி ஆள்பவரே! தீமையின் சக்திகள் பயனற்றுப் போகச் செய்யும். ஆமென்.

