மார்ச் 12, வியாழக்கிழமையன்று, புனித அகுஸ்தினார் சபையைச் சார்ந்த பேராயர் லூயிஸ் மரின் தெ சான் மார்ட்டின் அவர்களை, பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவராக, திருத்தந்தை பதினான்காம் லியோ நியமித்தார்.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி இத்தாலியிலுள்ள சூலியானாவின் பட்டம்சார் ஆயராக நியமிக்கப்பட்ட பேராயர் லூயிஸ் மரின் தெ சான் மார்ட்டின் அவர்கள், 2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் 11-ஆம் தேதி அதன் பட்டம்சார் ஆயராகவும் திருப்பொழிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பேராயர் பட்டம் பெற்ற ஆயர் மார்ட்டின் அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றச் செயலகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

அதேவேளையில், பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறையின் தற்போதைய ஓய்வுபெற்ற தலைவர் கர்தினால் கொன்ராட் கிராஜெவ்ஸ்கி அவர்கள் போலந்தின் லோட்ஸ்  உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்தினால் கிராஜெவ்ஸ்கி அவர்கள், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவராக முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவரை கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.

கர்தினால் கொன்ராட் கிராஜெவ்ஸ்கி லோட்ஸ்  உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர்

வத்திக்கானில் 1998-ஆம் ஆண்டு முதல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய கர்தினால் கிராஜெவ்ஸ்கி அவர்கள், தனது உரையில், தனது நீண்டகாலப் பணிக்காக நன்றியைத் தெரிவித்ததுடன், மூன்று வெவ்வேறு திருத்தந்தையர்களுடன் பணியாற்றிய ஆழமான அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

“தனது புதிய பேராயர் பொறுப்பைப் பற்றிப் பேசிய கர்தினால் கிராஜெவ்ஸ்கி அவர்கள், “லோட்ஸ் மறைமாவட்ட மக்களுக்குப் பணியாற்றத் தான் தயாராக இருக்கிறேன்” என்றும், “விசுவாசிகளுடன் நெருக்கமாக இருப்பதில்தான் திருஅவையின் நன்மை பிறக்கிறது” என்றும் கூறினார்.

வத்திக்கானில் நீண்ட காலம் பணியாற்றிய போதிலும், தனது இதயம் எப்போதும் போலந்து மக்களுடனேயே இருப்பதாகக் குறிப்பிட்ட கர்தினால் கிராஜெவ்ஸ்கி அவர்கள், தனது பிறந்த ஊருக்குத் திரும்புவதில் தான் மகிழ்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.