“இன்றைய உலகம் அநீதி, வன்முறை மற்றும் துன்பத்தால் நிறைந்துள்ளதால், நமது இறைநம்பிக்கை விழிப்புணர்வும் கவனமும் கொண்டதாகவும், சரியானதைப் பற்றிப் பேசக்கூடியதாவும் இருப்பது முக்கியம்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார்.

மார்ச் 15, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு திருத்தந்தை மொழிந்தார்.

இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. யோவா 9: 1-41) மையமாகக் கொண்டு தனது கருத்துக்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

விசுவாசம் மனித வாழ்க்கையை ஒளிரச் செய்கிறது

விசுவாசத்தை ஒரு “குருட்டுத்தனமான பாய்ச்சலாக” அதாவது, விளைவுகளை யோசிக்காமல் எடுக்கும் முடிவாகப் பார்க்காமல், மனித வாழ்க்கையை ஒளிரச் செய்யும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒளியாகப் பார்க்குமாறு விசுவாசிகளை திருத்தந்தை வலியுறுத்தினார்.

பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை அளிக்கும் நிகழ்வைக் குறித்துக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தக் கதை மீட்பின் மறையுண்மையைக் குறிக்கிறது” என்றும், “மனிதகுலம் இருளில் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையற்றவர்களின் கண்களைத் திறந்து, நம் வாழ்வில் ஒளிரச் செய்ய, கடவுள் தம்முடைய ஒரே திருமகனை இவ்வுலகிற்கு ஒளியாக அனுப்பினார்” என்றும் குறிப்பிட்டார்.

மெசியா பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளிப்பார் என்று இறைவாக்கினர்கள் முன்னறிவித்ததையும் (காண். எசா 29:18; 35:5; திபா 146:8), இயேசுவின் பணி இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தியது என்பதையும் விசுவாசிகளுக்கு திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இறைநம்பிக்கை தெளிவாகப் பார்க்க அனுமதிக்கிறது

“நாம் அனைவரும் பிறவியிலேயே பார்வையற்றவர்கள் என்று சொல்லலாம்,” என்று குறிப்பிட்ட திருத்தந்தை, “இறைநம்பிக்கை நம்மையும், மற்றவர்களையும், கடவுளையும் தெளிவாகக் காண அனுமதிக்கிறது” என்று விளக்கினார்.

மேலும் “கிறிஸ்துவைச் சந்திப்பது உண்மையில் உலகத்தை நன்கு புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகிறது” என்று விளக்கிய திருத்தந்தை, “இறைநம்பிக்கை விசுவாசிகளை விடயங்களை இயேசு பார்ப்பது போல பார்க்கவும், அவருடைய கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது” என்று எடுத்துக்காட்டினார்.

இறைநம்பிக்கையை கவனமுடன் வாழ வேண்டும்

அநீதி, வன்முறை மற்றும் துன்பம் நிறைந்த உலகில், விசுவாசிகள் தங்கள் இறைநம்பிக்கையை  கவனத்துடனும் முன்னுணர்ந்துரைக்கிற விதத்திலும் (யீசடியீhநவiஉயடடல) வாழுமாறு விசுவாசிகளை திருத்தந்தை ஊக்குவித்தார்.

மேலும் “நமது இறைநம்பிக்கை உலகின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவ வேண்டும்” என்றும் “அமைதி, நேர்மை மற்றும் மற்றவர்களுக்கு உதவுவதன் வழியாக நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள நம்மை ஊக்குவிக்க வேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

மரியாவின் பரிந்துரையை நாடுவோம்

இறுதியாக, “கிறிஸ்துவின் ஒளி இதயங்களின் கண்களைத் திறந்து, எளிமை மற்றும் துணிச்சலான வழியில் சான்றுபகர ஊக்கமளிக்கும் வகையில், விசுவாசிகள் அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையை நாட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு தனது மூவேளை இறைவேண்டல் உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.