
Prot. N. 316/15
இந்தியா
பம்பாய் உயர்மறைமாவட்டத்தின் பேராயரும் இந்திய கத்தோலிக்க இலத்தீன் ஆயர் பேரவையின் தலைவருமான மேன்மைமிகு ஒஸ்வால்டு கர்தினால் கிராசியாஸ் அவர்கள் 2015-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் நாள் எமக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இத்திருப்பேராயத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், உரோமைத் திருப்பலி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு மூலத்திற்கு ஒத்திருப்பதால் மகிழ்ச்சியோடு அதற்கு ஒப்புதல் அளிக்கிறோம்.
இந்நூல் அச்சிடப்படும்போது திருத்தூது ஆட்சிப்பீடத்தின் ஒப்புதல் ஆணை முழுவதும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் அச்சிடப்பட்ட இந்நூலின் இரு பிரதிகள் இத்திருப்பேராயத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
எதுவும் இதைத் தடை செய்ய முடியாது.
திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயச் செயலகம்,
2017 மே 16.
ராபர்ட் கர்தினால் சாரா
மேல்நர்
ஆர்த்துருஸ் ரோச்
பேராயர் செயலர்
திருத்தூது அமைப்பு விதிமுறைகள்
திருத்தூது அமைப்பு விதிமுறைகள்
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஆணைப்படி புதுப்பிக்கப்பெற்று வெளியிடப்படும்
உரோமைத் திருப்பலி நூல்
இறை அடியாருக்கு அடியார் பால், ஆயர்
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளியது.
“உரோமைத் திருப்பலி நூல்” நமது பதவியில் முன்னையவரான புனித ஐந்தாம் பயஸ் அவர்களால் திரெந்துச் சங்கத்தின் ஆணைப்படி 1570-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.” அத்திருச்சங்கத்தால் கிறிஸ்துவின் திரு அவை அனைத்துக்கும் விளைந்த பல வியத்தகு நன்மைகளுள் இதையும் ஒன்றாகக் கருத வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இலத்தீன் வழிபாட்டுமுறை அருள்பணியாளர்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்க அதையே ஒழுங்குமுறையாகக் கொண்டுள்ளார்கள்; நற்செய்தித் தூதர்களும் அதையே உலகம் எங்கும் கொண்டு சென்றுள்ளார்கள். மேலும் புனித பெரிய கிரகோரி பெருமளவு ஒழுங்குபடுத்தித் தந்த திருநூல் வாசகங்கள், வேண்டல்கள் வழியாக எண்ணற்ற புனிதர்கள் தங்கள் இறைப்பற்றை மேன்மேலும் ஊட்டி வளர்த்துள்ளார்கள்.
ஆனால் அண்மைக் காலத்தில் கிறிஸ்தவ மக்களிடையே திருவழிபாட்டின் மீதுள்ள ஆர்வம் பெருகி, உறுதி அடையத் தொடங்கியது; இந்த ஆர்வம் நமக்கு முன்னையவரான 12-ஆம் பயஸ் அவர்கள் கூறியபடி, இக்கால மக்கள் மீது இறைவன் கொண்ட அளப்பரிய பராமரிப்பையும் மீட்பு அளிக்கும் வகையில் திரு அவையில் தூய ஆவியாரின் செயலாற்றலையும் காட்டுகின்றது. எனவே, உரோமைத் திருப்பலி நூலின் பாடங்களைச் சிறிதளவு மாற்றியும் புதியவற்றைப் புகுத்தியும் அதை வளப்படுத்த வேண்டும் என்பது தெளிவாக விளங்கிற்று. 12-ஆம் பயஸ் அவர்களே பாஸ்கா திருவிழிப்பு, புனித வாரம் ஆகியவற்றுக்கான சடங்குமுறைகளைப் புதுப்பித்து, இம்முயற்சியை நிறைவேற்றத் தொடங்கினார்கள்; இவ்வாறு இக்கால மக்களின் உணர்வுக்கு ஏற்றவாறு உரோமைத் திருப்பலி நூலைத் தழுவியமைப்பதில் அவர்களே முதலடி எடுத்து வைத்தார்கள்.
அண்மையில் நடந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் “திருச்சங்கம்” எனத் தொடங்கும் “திருவழிபாடு” பற்றிய கொள்கை விளக்கத்தை வெளியிட்டு, உரோமைத் திருப்பலி நூலின் பொதுச் சீரமைப்புக்கு அடித்தளம் இட்டது; அது விதித்ததாவது: முதலாவது, “வாசகங்களும் சடங்குகளும் தாம் குறித்துக் காட்டும் தூய நிகழ்வுகளை மிகத் தெளிவாக வெளிக்கொணரும்படி
- 1 1570, ஜூலை 14-இல் வந்த Quo primum என்ற திருத்தூதுக் கொள்கைத் திருமுகம்.
- 2 காண். 12-ஆம் பயஸ், முதலாம் பன்னாட்டு திருவழிபாட்டு அருள்பணி மாநாட்டில் அறிவுரை: அசிசி, 1956, செப்டம்பர் 22: A.A.S. 48 (1956) பக். 712.
- 3 காண். திருச்சடங்குத் திருப்பேராயம்: உயிர்த்தெழுந்த ஆண்டவர் என்ற கட்டளை ஆவணம்: 1951, பெப். 9: A.A.S. 43 (1951) பக். 128;
- நம் மீட்பின் மாண்புயர் மறைபொருள்கள் என்னும் பொதுக் கட்டளைத் திருமுகம்: 1955, நவம்பர், 16: A.A.S. 47 (1955) பக். 838.
- ==============↑ பக்கம் 11
கவனம் செலுத்த வேண்டும்.”* மேலும் “திருப்பலியின் பகுதிகள் தத்தமக்கு உரிய தனி இயல்பும் அவை தமக்குள் கொண்டுள்ள தொடர்பும் இன்னும் தெளிவாகத் தோன்றும் முறையிலும் நம்பிக்கையாளர் திருப்பலியில் பக்தியுடனும் செயல்முறையிலும் இன்னும் எளிதாகப் பங்குகொள்ளத் தகுந்த முறையிலும் திருப்பலிமுறை சீரமைக்கப்பட வேண்டும்” ; தொடர்ந்து, “நம்பிக்கையாளருக்கு இறைவார்த்தைப் பந்தியில் இன்னும் மிக நிறைவான உணவு வழங்கப்படுமாறு விவிலியத்தின் கருவூலங்களை இன்னும் தாராளமாகத் திறந்துவிட வேண்டும் ; இறுதியாக, “கூட்டுத்திருப்பலிக்கெனப் புதியதொரு சடங்குமுறை தொகுக்கப்பட்டு ஆயர் சடங்கு நூலிலும் உரோமைத் திருப்பலி நூலிலும் சேர்க்கப்பட வேண்டும்.”
ஆயினும் உரோமைத் திருப்பலி நூலின் இத்தகைய சீர்திருத்தம் திடீரென எழுந்ததாகக் கருதக் கூடாது. திருவழிபாட்டு இயலில் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் எவ்வகை ஐயமும் இன்றி இதற்கு வழிவகுத்துள்ளன. திரெந்துச் சங்கத்துக்குப்பின் வத்திக்கான் நூலகத்திலிருந்தும் வேறு பல இடங்களிலிருந்தும் தேடி எடுக்கப்பெற்ற பழங்கால ஏடுகள் பற்றிய ஆய்வுகள் “உரோமைத் திருப்பலி நூலை”ச் சீரமைக்க மிக உதவியாய் இருந்தன என்று நம் பதவியில் முன்னையவரான புனித ஐந்தாம் பயஸ் அவர்கள் விடுத்த Quo primum என்ற திருத்தூது அமைப்பு விதிமுறைகள் வலியுறுத்துகின்றன. அதற்குப்பின், ஒருபுறம் முற்காலத் திருவழிபாட்டின் மூல நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன; மறுபுறம் கீழைத் திரு அவையின் திருவழிபாட்டுப் பாடங்கள் ஆழ்ந்து ஆராயப்பட்டன; பலர் விரும்பியபடி, போதனையும் பக்தியுணர்வும் நிறைந்த இத்தகைய கருவூலங்களைப் பழைய சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகத்தின் இருளில் விட்டுவிடாமல், கிறிஸ்தவ மக்களின் உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் ஒளியோடு நல்லுணர்வும் அளிக்குமாறு வெளிக் கொணர வேண்டும்.
புதிய உரோமைத் திருப்பலி நூலின் பொதுவான அமைப்புக் கூறுகளை இப்பொழுது எடுத்துரைக்க விரும்புகின்றோம். முதன்முதலில், இந்நூலின் முன்னுரையாக அமைந்திருக்கும் “பொதுப் படிப்பினை” யில் திருப்பலி நிறைவேற்றப் புதிய விதிமுறைகள் தரப்பட்டுள்ளதைக் காண்கின்றோம்; திருச்சடங்கை நடத்தும் முறை, சூழ்ந்திருப்போருக்கும் பங்கேற்போருக்கும் உரிய பணிகள், திருப்பலிக்குத் தேவையான பொருள்கள், இடங்கள் முதலானவற்றிற்கு உரிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இச்சீர்திருத்தத்தில் நற்கருணை மன்றாட்டு சிறப்பிடம் பெறுகின்றது. உரோமை வழிபாட்டு முறையில் இம்மன்றாட்டின் முதல் பகுதியாகிய தொடக்கவுரை காலப்போக்கில் பற்பல வடிவங்களைப் பெற்றிருந்தாலும் அதன் பிற்பகுதியாகிய நற்கருணை மன்றாட்டு உருவாகிய நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு முதல் மாறுபடாத அமைப்பைப் பெற்றுள்ளது; மாறாக, கீழைத் திருவழிபாடுகள் தங்கள் நற்கருணை மன்றாட்டுப் பகுதியில் பல்வேறு பாடங்களைக் கொண்டிருக்கின்றன. விளங்கக் கூறின், நற்கருணை மன்றாட்டு பல தொடக்கவுரைகளைப் பெற்று, வளர்ச்சி அடைந்துள்ளது; இவை உரோமைத் திரு அவையின் மரபிலிருந்து எடுக்கப்பட்டவை அல்லது புதிதாக எழுதப்பட்டவை; மீட்பு மறைபொருளின் சிறப்புக் கூறுகளைத் தெளிவாக்கவும் நன்றியுணர்வைத் தூண்டப் பல கருத்தாழம் உள்ள காரணங்களை எடுத்துரைக்கவும் இவை உதவுகின்றன. எனினும் திருப்பலி முறையில் மூன்று புதிய நற்கருணை மன்றாட்டுகளைச் சேர்க்கத் தீர்மானித்துள்ளோம். அதே வேளையில், மக்கள் நலனைக் கருதியும் கூட்டுத்திருப்பலி எளிதாக நிகழவும் எல்லா நற்கருணை மன்றாட்டுகளிலும் ஆண்டவருடைய வார்த்தைகள் மாற்றம் இன்றி இருக்கப் பணித்துள்ளோம்; எனவே, எல்லா நற்கருணை மன்றாட்டுகளிலும் அர்ச்சிப்பு வாய்பாடு அப்பத்தின் மீது, “அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்; ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்” என்றும்,
- 4 II வத். சங்கம்: திருவழிபாடு (இனி திருவழிபாடு ), எண் 21.
- 5 காண். மேற்படி, எண் 50.
- 6 காண். மேற்படி, எண் 51.
- 7 காண். மேற்படி, எண் 58.
- ==============↑ பக்கம் 12
கிண்ணத்தின் மீது, “அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்; ஏனெனில் இது யே, நிலையான உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்; இது பாவ -விப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றும் இருக்க விரும்புகின்றோம். கிறிஸ்து ஆண்டவருடைய வார்த்தைகளின் உட்பொருளிலிருந்து பெறப்பட்டு, அருள் பணியாளர் எடுத்துரைக்கும் « நம்பிக்கையின் மறைபொருள்” என்னும் சொற்கள் நம்பிக்கையாளரின் ஆர்ப்பரிப்புக்கு இட்டுச் செல்கின்றன.
திருப்பலியின் அமைப்புமுறையில் திருச்சடங்குகளின் மையப்பொருளைப் பாதிக்காத வகையில் வழிபாட்டு முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இரட்டிப்பாக்கப்பட்ட திருச்சடங்குகளும் பயன் அதிகம் இன்றிச் சேர்க்கப்பட்டவையும்” சிறப்பாக அப்ப, இரசத்தை ஒப்புக்கொடுக்கும் திருச்சடங்கிலிருந்தும் அப்பத்தைப் பிட்டு நற்கருணை வழங்கும் திருச்சடங்கிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் காலப்போக்கில் சிதைந்து போன திருச்சடங்குகள், திரு அவைத் தந்தையரின் தொன்மையான விதிமுறையைப் பின்பற்றி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன: மறையுரை,”1 பொது மன்றாட்டு அல்லது நம்பிக்கையாளரின் மன்றாட்டு,12 திருப்பலியின் தொடக்கத்தில் கடவுளோடும் சகோதரர் சகோதரிகளோடும் ஒப்புரவாகும் திருச்சடங்கு ஆகியவை இத்தகையன. இவற்றை மீண்டும் சேர்ப்பது பொருத்தம் எனக் கருதப்பட்டது.
மேலும் “குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாகத் திருமறைநூலின் முதன்மையான பகுதிகள் மக்களுக்கு வாசித்தளிக்கப்பட வேண்டும்” 13 என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஆணைக்கு ஏற்ப ஞாயிறு திருப்பலியில் வாசிக்கப்பட வேண்டிய வாசகத் தொகுப்பு அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்காக முறைசெய்யப்பட்டிருக்கின்றது. மேலும் திருமுக, நற்செய்தி வாசகங்களுக்குமுன் விழா நாள்களில் பழைய ஏற்பாட்டிலிருந்தும் பாஸ்கா காலத்தில் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்தும் மற்றொரு வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறையைக் கடைப்பிடிப்பதால், மீட்பு மறைநிகழ்வின் தொடர் செயல்பாடுகள், வெளிப்படுத்தப்பட்ட இறைவார்த்தையால் மிகத் தெளிவாக விளங்குகின்றன. விழா நாள்களில் திருமறைநூலின் மிகச் சிறப்பான பகுதிகளை இவ்வாறு எடுத்துரைப்பதோடு ஏனைய நாள்களில் மற்றப் பகுதிகளும் வாசிக்கப்படுவதால் திருநூலின் வாசகங்கள் மிகுதியாகவும் நிறைவாகவும் மக்களுக்குக் கிடைக்கும்படி வழங்கப்படுகின்றன.
நம்பிக்கையாளர் நடுவில் கடவுளின் வார்த்தைமீது தணியாத் தாகம்14 உருவாகும் வகையில் இவை எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன; ஏனெனில் இதனால் புதிய உடன்படிக்கையின் மக்கள் தூய ஆவியாரின் வழிநடத்துதலால் திரு அவையில் நிறைவான ஒற்றுமையை உண்டாக்க ஊக்கப்படுத்தப்படு வதாகத் தெரிகின்றது. இவ்வாறு அமைவதால், அருள் பணியாளர்களும் நம்பிக்கையாளரும் ஆண்டவருடைய இரவு விருந்தைப் புனிதமுடன் உட்கொள்ளத் தங்களை மேன்மேலும் ஆயத்தம் செய்வார்கள் என்றும் திருமறைநூலை ஆழ்ந்து அறிந்து தியானித்து, இறைவார்த்தையால் நாளுக்கு நாள் மிகுதியாக ஊட்டம் பெறுவார்கள் என்றும் உறுதியாக நம்புகின்றோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அறிவுரைப்படி, அருள்வாழ்வின் நிலையான ஓர் ஊற்றாகவும் கிறிஸ்தவ நம்பிக்கையை வழங்கும் முதன்மைச் சான்றாகவும் இறையியல் பயிற்சியின் கருப்பொருளாகவும் திருநூலை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் விளைவு ஆகும்.
- 8 காண். மேற்படி, எண் 50.
- 9 காண், மேற்படி, எண் 50.
- 10 காண். மேற்படி, எண் 50.
- 11 காண், மேற்படி., எண் 52.
- 12 காண், மேற்படி, எண் 53.
- 13 காண். மேற்படி, எண் 51.
- 14 காண். ஆமோஸ் 8:11.
- ============== ↑ பக்கம் 13

உரோமைத் திருப்பலி நூலைச் சீர்படுத்துவதில் மாற்றம் அடைந்தவை நாம் மேலே குறிப்பிட்ட நற்கருணை மன்றாட்டு, திருப்பலி அமைப்புமுறை, வாசக அமைப்புமுறை ஆகிய மூன்று பகுதிகள் மட்டுமல்ல; வேறு மாற்றங்களும் உள்ளன. ஆண்டின் பொதுக் காலப் பகுதி. புனிதரின் சிறப்புப் பகுதி, புனிதரின் பொதுப் பகுதி, திருச்சடங்குத் திருப்பலிகள், நேர்ச்சித் திருப்பலிகள் ஆகியவற்றிலும் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கான மன்றாட்டுகள் மீது தனிக் கவனம் செலுத்தி, இக்காலத் தேவைகளுக்கு ஏற்பப் புதியவற்றைச் சேர்த்ததால், அவற்றின் எண்ணிக்கை பெருகின; மேலும் பழைய மன்றாட்டுகள் தொன்மையான பாடங்களுக்கு ஏற்றவாறு திருத்தி அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகிய சிறப்புக் காலங்களின் வாரநாள்களுக்கு ஏற்ற பல்வேறு மன்றாட்டுகள் உள்ளன.
இன்னும் எஞ்சியிருப்பவற்றுள் உரோமைப் படிக்கீதம் என்ற நூலின் பாடங்கள் இசையைப் பொறுத்தமட்டில் மாற்றப்படவில்லை; எனினும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு, புனித அகுஸ்தின், புனித பெரிய லியோ ஆகியோர் அடிக்கடி குறிப்பிட்ட பதிலுரைத் திருப்பாடலும் வருகைப் பல்லவியும் திருவிருந்துப் பல்லவியும் தேவைக்கு ஏற்பச் சீரமைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, புதிய உரோமைத் திருப்பலி நூலைப் பற்றி இதுவரை நாம் விளக்கியவற்றுள் சிலவற்றை இப்பொழுது வலியுறுத்தவும் அவை செயல் வடிவம் பெற வேண்டும் எனவும் விரும்புகின்றோம். நம் முன்னையவரான புனித ஐந்தாம் பயஸ் உரோமைத் திருப்பலி நூலின் முதல் பதிப்பை வெளியிட்டபோது, திருவழிபாட்டு ஒற்றுமையை உருவாக்கும் கருவியாகவும் திரு அவையில் விளங்கும் உண்மையான இறைவழிபாட்டின் சின்னமாகவும் அதைக் கிறிஸ்தவ மக்களுக்கு அளித்தார். அவ்வாறே நாமும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஆணைப்படி, புதிய திருப்பலி நூலில் “முறையான வேறுபாடுகளையும் தழுவியமைத்தல்களையும்” 15 சேர்த்துள்ளோம். கிறிஸ்தவ மக்கள் அனைவருடைய ஒன்றிப்புக்குச் சான்று பகர்ந்து உறுதிப்படுத்தும் கருவியாக இதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என உறுதியாக நம்புகின்றோம். பல்வேறு மொழிகளில் இதைப் பயன்படுத்தினாலும் எல்லாருடைய ஒரே மன்றாட்டு நம் தலைமைக் குரு இயேசு கிறிஸ்து வழியாகத் தூய ஆவியாரில் விண்ணகத் தந்தையை நோக்கி நறுமணத் தூபம் போல எழுவதாக.
இவ்வமைப்பு விதிமுறைகளில் கூறப்பட்டவை எல்லாம் இந்த ஆண்டு நவம்பர் 30ஆம் நாள், அதாவது இவ்வாண்டின் திருவருகைக் கால முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நடைமுறைக்கு வர வேண்டும் என நாம் ஆணையிடுகின்றோம்.
மேற்குறிப்பிட்ட நம் விதிகளும் சட்டங்களும் இன்றும் வருங்காலத்திலும் நிலைத்துச் செயலாக்கம் பெற வேண்டும் என விரும்புகின்றோம். இவற்றை நம் முன்னையவர்கள் வெளியிட்ட திருத்தூது அமைப்பு விதிமுறைகளோ ஆணைத் தொகுப்புகளோ குறிப்பிடத்தக்க, விதிவிலக்கு அளிக்கக்கூடிய கட்டளைகளோ தடைசெய்ய முடியாது.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரவு விருந்து விழாவாகிய 1969 ஏப்ரல் மூன்றாம் நாள் நமது ஆட்சியின் ஆறாம் ஆண்டில் உரோமை நகர், புனித பேதுரு பெருங்கோவிலில் இது வழங்கப்பட்டது.
திருத்தந்தை ஆறாம் பால்
=============================== ↑ பக்கம் 14

