இந்தக் கூட்டம், உங்கள் சகோதர அன்பை புத்துயிர் பெறச்செய்யவும், உலகளாவிய கிறிஸ்தவச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கவும் உதவட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
இறையாட்சியின் இலட்சியத்தைத் தழுவுவதற்கு ஒன்றிப்பு ஒரு தவிர்க்க முடியாத காரணியாக அமைத்துள்ளது என்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கும் கிறிஸ்தவ பணிக்கும் இடையே ஓர் உள்ளார்ந்த பிணைப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 18, இவ்வியாழனன்று உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பின் நான்காவது உலகக் கூட்டம் Ghana நாட்டின் தலைநகர் Accra-வில் தொடங்கி நடைபெற்று வரும் வேளை, (ஏப்ரல் 16-19 வரை) அதன் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பானது, சமகால கிறிஸ்தவத்தின் அழகிய ஒன்றிப்பை அதன் செழுமையான பன்முகத்தன்மையுடன் பிரதிபலிக்கிறது என்றும் பெருமிதம் கொண்டுள்ளார்.
‘உலகு அறிந்து கொள்ளும்’ (யோவா 17:23b) என்ற உங்களது இவ்வாண்டின் கருப்பொருளானது, கிறிஸ்தவர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் திருஅவை வாழ்வில் மூவொரு கடவுளின் ஒன்றிப்பையும் அன்பையும் உள்ளடக்கி, பிரிவினையினாலும் போட்டியினாலும் காயப்பட்டுள்ள உலகத்திற்கு சாட்சியாக இருக்குமாறு அழைப்பு விடுக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
உங்களின் அமைப்பின் வரலாறு, கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கும் கிறிஸ்தவ பணிக்கும் இடையேயான பிணைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இதில் உறுப்பினர்கள், குறிப்பாக கிறிஸ்தவ நம்பிக்கையின் வெவ்வேறு வரலாற்று வெளிப்பாடுகளைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்துவில் ஒருவரையொருவர் சந்திப்பதன் வழியாக ஒருவருக்கொருவர்மீதான மரியாதை மற்றும் உடன்பிறந்த உறவில் வளர்க்கின்றனர் என்றும் தனது செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார்.
இவ்வமைப்பின் வெள்ளி விழா ஆண்டில் நிகழும் இந்தக் கூட்டம், உங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தவும், நீங்கள் ஒன்றாக இறைவேண்டல் செய்யும்போது, உங்கள் சகோதர அன்பை புத்துயிர் பெறச்செய்யவும், உங்கள் தனிப்பட்ட வாழ்வின் கதைகளை பரிமாறிக்கொள்ளவும் மற்றும் உலகளாவிய கிறிஸ்தவச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கவும் உதவட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்