திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் அவர்கள், உலகப் போருக்காக அழுதவர், அப்போரினால் பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவராக உணர்ந்தவர். மேலும் வலிமைவாய்ந்தவர்கள் அனைவரையும் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுமாறு கெஞ்சிக்கேட்டுக்கொண்டவர் : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
திருத்தந்தை 10-ஆம் பத்திநாதர் எப்போதும் மறைக்கல்வியின் திருத்தந்தை என்று அழைக்கப்படுவதுடன், அவர் ஒரு மென்மையான மற்றும் வலிமையான, பணிவான மற்றும் தெளிவான சிந்தனை கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 17, இப்புதனன்று, அருள்பணியாளர் Don Lucio Bonora எழுதியுள்ள ‘Homage to Pius X. Ritratti coevi’ அதாவது, ‘10-ஆம் பத்திநாதருக்கு அஞ்சலி! சமகால ஓவியங்கள்’ என்ற புதிய நூல் ஒன்றிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
திருநற்கருணை இல்லாமல் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளை ஒருங்கிணைக்காமல் வாழும் தனிப்பட்ட நம்பிக்கை பலவீனமடைந்து இறக்க நேரிடும் என்று ஒட்டுமொத்த திருஅவைக்கும் புரிதலை ஏற்படுத்தியவர் புனித பத்தாம் பத்திநாதர் என்றும் பெருமைப்பட கூறியுள்ளார் திருத்தந்தை.
இன்னொரு காரணத்திற்காகவும் நான் திருத்தந்தை பத்தாம் பத்திநாதரை அன்புகூருகின்றேன் என்று குறிப்பிட்டுள்ள திருந்தந்தை, உரோமையிலுள்ள விவிலிய நிறுவனத்தின் (Biblical Institute) பிறப்பை திருஅவை மற்றும் ஆன்மிக நன்மைகளுடன் வளர்த்தமைக்காக, அதனைத் திருஅவை முழுவதும் விரைவில் பரவச் செய்தமைக்காக இயேசு சபையாளர்கள் என்ற முறையில் நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தனது அணிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் உலகப் போருக்காக அழுதவர் என்றும் அப்போரில் பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவனாக உணர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வலிமைவாய்ந்தவர்கள் அனைவரையும் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுமாறு அவர் கெஞ்சிக்கேட்டுக்கொண்டார் என்றும், இன்றைய உலகில் இந்தத் துயரமான நேரத்தில் நான் அவருடன் அதிகம் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் நலிந்தவர்கள், ஏழைகள், தேவையில் இருப்பவர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் அல்லது வாழ்க்கையின் துயரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்க விரும்பியவர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்