ஜூபிலி 2025
புதுப்பிக்கப்பட்ட வலிமையுடனும் நம்பிக்கையுடனும் முன்னேறுங்கள்!
திருத்தந்தை பிரான்சிஸ்
அன்பான சகோதரர் சகோதரிகளே, புனித ஆண்டு 2025 நெருங்கி வரும் இவ்வேளையில், இந்த யூபிலியின் அருளில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, நமது தாய்நாடான விண்ணகத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
சாண்டியாகோ தெ கம்போஸ்டெலா, துய்-விகோ மற்றும் மொண்டோசெடோ-ஃபெரோல் மறைமாவட்டங்களின் அருள்பணியாளர் உயர் பயிற்சியகங்களுக்கு இடையேயான குழுமத்தினரை டிசம்பர் 12 ஆம் தேதி திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
நீங்கள் மேற்கொள்ளும் பயணத் திட்டத்தைக் குறிக்க, ’திருப்பயணம்’ என்ற படம் போதுமானது என்று நான் நம்புகிறேன் என்று உரைத்த திருத்தந்தை, திருப்பயணிகளாக, முதலில், ஓர் அழைப்பை உணர்கிறோம், அது நம்மை விட்டு வெளியே வர தூண்டுகிறது; பின்னர், நாம் நமது வீரச்செயலைத் தொடங்கி பயணிக்கிறோம், வெவ்வேறு தருணங்களையும் நிலைகளையும் அனுபவிக்கிறோம், இறுதியாக, நமது இலக்கை அடைகிறோம் என்று அவர்களுக்கு விவரித்தார்.
நமது அருள்பணித்துவத்துவத்துக்கான பயிற்சியிலும் இதுவே நிகழ்கிறது, அங்குக் கடவுளின் மக்களின் மேய்ப்புப் பணியாளர்களாக மாறுவதே குறிக்கோள், கிறிஸ்துவின் தாழ்மையான மற்றும் இரக்கமுள்ள இதயத்தின் அளவின்படி உருவாக்கப்பட்ட மேய்ப்புப் பணியாளர்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.
அதேவேளையில் இந்தத் திருப்பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் இதுவே அடிப்படையானது என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இயேசுவுக்கு உங்கள் இதயத்தைத் திறக்க பயப்படாதீர்கள், அவர் உங்களுடன் வரட்டும், அதனால் அவர் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த் திருப்பயணத்தில் நீங்கள் பலவிதமான மனிதர்களைச் சந்திப்பீர்கள், அவர்களில் சிலர் கடினமான காலங்களில் சென்றுகொண்டிருக்கலாம், காயப்பட்டிருக்கலாம் அல்லது கடவுளை அறியாமல் இருக்கலாம் என்று உரைத்த திருத்தந்தை, அவர்கள் அனைவருக்கும் நற்செய்தியின் மகிழ்ச்சியின் சான்றுகளாக இருங்கள், பயணத்தின் கொப்புளங்களைக் குணப்படுத்த இறைவனின் மென்மையையும் ஆறுதலையும் அவர்களுக்கு வழங்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
புனித திருமுழுக்கு யோவானைப் போன்று, இயேசுவைச் சுட்டிக்காட்டி, உங்கள் வார்த்தைகளாலும், அனைத்திற்கும் மேலாக உங்கள் வாழ்க்கை முறையாலும், ’இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ (யோவான் 1: 29) என்று சொல்லும் நபர்களாக இருப்பதை நிறுத்தாதீர்கள் என்றும் அவர்களிடம் விண்ணப்பித்தார்.