பிப்ரவரி 26, புதன்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலைக் குறித்து பின்வரும் அறிவிப்புகளை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வழங்கியுள்ளது .
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறுநீரகப் பிரச்சனைகள் குறைந்துவிட்ட நிலையில், அவரது உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் இருந்து வருகிறது. அண்மைய CT ஸ்கேன் அவரது நுரையீரல் அழற்சியின் இயல்பான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவரது இரத்த பரிசோதனைகள் நல்ல முடிவுகளை அளித்துள்ளன. மதியம், அவர் தனது திருப்பீட நிர்வாகப்பணி அலுவல்களைத் தொடர்ந்தபோதிலும் அவரது உடல் நிலை, மருத்துவக் கணிப்புகளுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டு வரும் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றுபோல் இன்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. சுவாச உடலியக்க (physiotherapy) மருத்துவ சிகிச்சைத் தொடர்கிறது. அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள அதேவேளை, மருத்துவர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக்கொண்டு வருகிறார்.
பிப்ரவரி 27, வியாழக்கிழமை இன்று
பிப்ரவரி 26, புதன்கிழமை இரவு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றாக உறங்கினார் என்றும், பிப்ரவரி 27, வியாழக்கிழமை இன்று, நன்றாக ஓய்வெடுக்கின்றார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இன்று காலை அறிவித்துள்ளது.
தினசரி இருமுறை அறிக்கைகள்
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை பிற்பகலில், உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் (Bronchitis) சிகிச்சைக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகள் தினசரி இருமுறை விசுவாசிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.