விசுவாசிகள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கில் ஒன்றிணைந்து நடைபோடவும், நம் வாழ்வை மாற்றியமைக்க கடவுள் விடுக்கும் அழைப்புக்கு செவிமடுக்க இந்த தவக்காலம் தரும் வாய்ப்பை நாம் ஏற்கவும் தயாராக இருப்போம் என தன் தவக்காலச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ளார் .
மார்ச் மாதம் 5ஆம் தேதி துவங்க உள்ள தவக்காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற யூபிலி ஆண்டின் மையக்கருத்தை ஒட்டி தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
பயணத்தின் முக்கியத்துவம், ஒன்றிணைந்து பயணித்தல், எதிர்நோக்குடன் பயணித்தல் என்ற மூன்று கோணங்களில் தன் கருத்துக்களை இத்தவக்காலச் செய்தியில் திருத்தந்தை பகிர்ந்துள்ளார்.
நம் விசுவாச வாழ்வு என்பது மனமாற்றத்தின் பயணம் எனக்கூறும் திருத்தந்தை, இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட பூமியை நோக்கி பயணம் செய்ததுபோல் நம் வாழ்வும் இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணம் தொடர்ந்து நம் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார் .
ஒன்றிணைந்த பயணத்திற்கான அழைப்பு என்பது ஒன்றித்த நடைபோடுதலுக்கான அழைப்பு என எடுத்துரைக்கும் திருத்தந்தை, நாம் நம்மைப் பற்றியே எப்போதும் சிந்திப்பவர்களாக இராமல் இறைவனை நோக்கியும், நம் சகோதர சகோதரிகளை நோக்கியும் நடைபோடுபவர்களாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
நம் பயணத்தில் எவரும் விடுபட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது, ஏனெனில் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற வகையில் பொது மாண்பை கொண்டுள்ளவர்கள் என மேலும் திருத்தந்தை தன் செய்தியில் தெரிவித்துள்ளார் .
மீட்பு மற்றும் முடிவற்ற வாழ்வு குறித்த இறை வாக்குறுதியில் நம்பிக்கைக் கொண்டு நடைபோடுவோம் என்ற அழைப்பை விடுக்கும் திருத்தந்தை, இறை இரக்கத்தில் நாம் உண்மையில் நம்பிக்கைக் கொண்டுள்ளோமா என்பது குறித்து சிந்திப்போம் எனவும் கேட்டுள்ளார்.