திருஅவையில் இரு அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பது குறித்த தினத்தை தீர்மானிக்க கர்தினால்கள் அவையைக் கூட்டவும், திருமறைக்காக உயிரை இழந்த இருவர், மற்றும் தங்களின் வீரத்துவ பண்புகளுக்காக மூவர் என ஐவரின் பெயர்களை புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஏற்கவும் திருத்தந்தை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மருத்துவமனையில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பொது விவகாரங்களுக்கான அதிகாரி, பேராயர் Edgar Peña Parra ஆகியோரை பிப்ரவரி 24ஆம் தேதி திங்களன்று சந்தித்தபோது திருத்தந்தை, புதிய இறையடியார்கள் குறித்த விவரங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
புனிதர் பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத்துறைக்கு இந்த ஏற்பு அனுமதியை திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்து வட கொரியாவில் திருமறைக்காக தன் உயிரை இழந்த மறைமாவட்ட அருள்பணியாளர் இறையடியார் Emilio Giuseppe Kapaun, இத்தாலியில் பிறந்து திருமறைக்காக உயிரை இழந்த பொதுநிலை விசுவாசி இறையடியார் Salvo D’Acquisto ஆகியோரின் பெயர்களும், தங்கள் வீரத்துவ பண்புகளுக்காக இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் இறையடியார் Michael Maura Montaner, இத்தாலியின் அருள்பணியாளர் இறையடியார் Didacus Bessi, போலந்தின் பொதுநிலைப் பெண்மணி இறையடியார் Cunegonda Siwiec ஆகியோரின் பெயர்களும் திருத்தந்தையால் புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இது தவிர, வெனிசுவேலாவைச் சேர்ந்த அருளாளர் Joseph Gregorio Hernández Cisneros, இத்தாலியின் அருளாளர் Bartolo Longo ஆகியோரை புனிதர்களாக அறிவிக்கும் நாள் குறித்து ஆலோசிக்க கர்தினால்கள் அவையை கூட்ட உள்ளது குறித்தும் திருத்தந்தை விவாதித்ததாக திருப்பீட அறிக்கை தெரிவிக்கிறது.