இறைவார்த்தையை அறிவிப்பதற்கும், பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் தங்களை அர்ப்பணித்திருக்கும் திருத்தொண்டர்கள் அனைவரும், தங்களது வார்த்தையாலும் செயலாலும் திருஅவைப் பணியினை ஆற்றி வருகின்றார்கள் என்றும், கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் அனைவரிடத்திலும் பகிர்ந்து வருகின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் .
பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருத்தொண்டர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலியானது, புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வழக்கமாக வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகளுக்கு வழங்கும் ஞாயிறு மூவேளை செப உரையின் எழுத்துப் படிவத்தை திருப்பீடச் செய்தித் தொடர்பகத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அளித்துள்ளார் .
அனைவரையும் அரவணைக்கும் அன்பு கொண்டவர்களாக மாறவும், தீமையை நன்மையாக மாற்றவும், உடன்பிறந்த உணர்வு கொண்ட உலகத்தை உருவாக்கும் அன்பின் அடையாளமாக இருக்கவும், திருத்தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரிடத்தில் அன்பு காட்ட அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் தான் தொடர் மருத்துவ சிகிச்சைகளையும், ஓய்வையும் மேற்கொண்டு வருவதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கும், உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிற நோயாளிகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் நலவாழ்வுப் பணியாளர்கள் கொடுத்து வரும் கவனிப்புக்கும் அர்ப்பணிப்புள்ளப் பணிக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
துன்புறும் உக்ரைன் மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பமாகிய மூன்றாவது ஆண்டு நிறைவானது பிப்ரவரி 24, திங்கள்கிழமை நினைவுகூரப்படுவதை சுட்டிக்காட்டி, அனைத்து மனித குலத்திற்கும் வேதனையையும் அவமானத்தையும் ஏற்படுத்திய ஆண்டின் நினைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மக்கள் மட்டுமல்லாது போரினால் பாதிக்கப்படும் மக்களாகிய பாலஸ்தீனம், இஸ்ரயேல், மத்திய கிழக்கு மியான்மார், கீவு, சூடான் பகுதி மக்களுக்காக செபிப்பதாகவும், அமைதி என்னும் கொடையினை அம்மக்கள் பெற செபிப்போம் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
விரைவில் உடல்நலம் பெற தனக்காக செபித்து, மக்கள் அனுப்பி வரும் கடிதங்கள், ஓவியங்கள் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்ததாக எடுத்துரைத்து தனக்காக செபித்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், அனைவரையும் அன்னை மரியாவின் பரிந்துரையில் ஒப்படைத்து தனக்காக செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.