திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சுய நினைவுடன் இருக்கின்றார் என்றும், உடல்நிலை மோசமாக இருந்தாலும், மூச்சுத்திணறல் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் திருப்பீடச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் திருத்தந்தையின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வரும் திருப்பீடச்செய்தித் தொடர்பகமானது, பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுய நினைவுடன் இருப்பதாகவும், ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்துள்ளது.
இரத்தப் பரிசோதனை முடிவுகள் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், தற்போது அவைக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப் பராமரிப்பவர்களுடன் இணைந்து மருத்துவமனையில் தங்கி இருக்கும் அறையில் ஞாயிறு திருப்பலியில் பங்கெடுத்துக் கொண்டார் என்றும் எடுத்துரைக்கின்றன.
உரோம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மறைமாவட்டங்களிலும் திருத்தந்தையின் உடல்நலத்திற்காக பல்வேறு செபவழிபாட்டினை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இத்தாலியைச் சார்ந்த பல்வேறு பள்ளிக் குழந்தைகள் ஓவியங்கள் பல வரைந்து திருத்தந்தைக்கு அனுப்பி வைத்து, அவர் உடல்நலம் பெற தங்களது செபத்துடன் கூடிய வாழ்த்தை எடுத்துரைத்து வருகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று வத்திக்கான் திரும்ப அவர்களுக்காக ஒன்றிணைந்து செபிப்போம்.