பிப்ரவரி 20, வியாழக்கிழமை காலை, ‘திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேற்றைய இரவை நன்றாகக் கழித்தார் என்றும், இன்று காலை நல்ல உடல்நிலையுடன் விழித்தெழுந்து காலை உணவை நாற்காலியில் அமர்ந்து உட்கொண்டார்’ என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 19, புதன்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மருத்துவ நிலையில் முன்னேற்றம் உள்ளது என்றும், மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்ட இரத்தப் பரிசோதனைகள், குறிப்பாக, அழற்சி குறியீடுகளில் சிறிது முன்னேற்றத்தைக் காட்டுகின்றன என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
காலை உணவுக்குப் பிறகு, திருத்தந்தை சில செய்தித்தாள்களைப் படித்ததாகவும், அதன் பின்னர் தனது நெருங்கிய அலுவலகப் பணியாளர்களுடன் தனது வேலையைச் செய்தார் என்றும், மதிய உணவுக்கு முன், அவர் திருநற்கருணையைப் பெற்றார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை மேலும் தெரிவித்திருந்தது.
புதன் பிற்பகலில், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 20 நிமிடங்கள் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
திருத்தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த சில நாட்களில், திருத்தந்தையின் உடல் நலன் குறித்து மருத்துவர்கள் வழங்கும் அறிக்கைகளை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தினமும் வெளியிட்டு வருகிறது.