மியான்மாரின் மண்டலே மறைமாவட்ட அருள்பணியாளர் டோனால்ட் மார்ட்டின் அவர்கள், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காலை லூர்து அன்னை ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலில், கத்தியினால் தாக்கப்பட்ட ஏராளமான காயங்கள் இருந்ததாகவும், பலமுறை மிகக்கொடூரமாக அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
44 வயதான அருள்தந்தை டோனால்ட் மார்ட்டீன் அவர்களைக் கொன்ற கொலையாளி யார் என்பது இதுவரைக் கண்டறியப்படவில்லை என்றும், எதிர்க்கட்சிப் படையினர், மற்றும் மியான்மார் இராணுவத்திற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக ஏற்படும் வன்முறை சூழலில் இது நிகழ்ந்துள்ளது என்றும் செய்திகள் எடுத்துரைக்கின்றன.
கொலைக்கான காரணத்தையும் கொலையாளிகள் யார் என்பதற்கான அடையாளத்தையும் அறிந்துகொள்ளும் முயற்சியில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும், வடக்கு மியான்மரில் உள்ள சாகாயிங் பகுதி, மக்கள் பாதுகாப்புப் படைகளுக்கும் பர்மிய இராணுவத்திற்கும் இடையிலான சண்டைகள் மற்றும் மோதல்கள் தினமும் நடைபெறும் ஒரு பகுதி என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அருள்பணி.டோனால்ட் மார்ட்டின் அவர்கள், 2018-ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவுபெற்றார். உள்நாட்டுப் போரின் போது, மக்களின் ஆன்ம ஆலோசகராகத் தனது கடமைகளை ஆர்வம், உண்மை மற்றும் கீழ்ப்படிதலுடன் நிறைவேற்றியவர் என்றும், திருவருளடையாளங்களை பங்கு மக்களுக்கு வழங்குவதிலும், அருகிலிருக்கும் துன்புறும் மக்களுக்கு உதவியவர் என்றும் அவரைக்குறித்து மக்கள் எடுத்துரைத்தனர்.
நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும், தேவையில் இருக்கும் மக்களுக்கு உணவுப்பொருள்கள் மட்டுமல்லாது ஆன்மிக ஆறுதலையும் வழங்கி உதவியவர் என்றும் கூறுகின்றனர்.
மாண்டலே என்னும் நகரம் மியான்மாரின் இரண்டாவது பெரிய நகரமாகும். ரங்கூனில் இருந்து 445 மைல்கள் தொலைவில் ஐராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒன்பதரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.