உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் Bronchitis எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது நலமுடன் இருப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
பிப்ரவரி 15, சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து, அவரது உடல் நலம் பற்றியத் தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி இவ்வாறு கூறினார்.
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை பிற்பகலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மாலையில் லேசான காய்ச்சல் இருந்த நிலையில், பிப்ரவரி 15, சனிக்கிழமை காலை, காய்ச்சல் இல்லையென்றும், எந்த விதமான பிரச்சனையும் இன்றி இரவு ஓய்வெடுத்து இளைப்பாறினார் என்றும் தெரிவித்தார் புரூனீ.
காலை உணவிற்குப் பின் சில செய்தித்தாள்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாசித்தார் என்று எடுத்துரைத்த புரூனீ அவர்கள், பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையினை மருத்துவமனையில் இருந்து வழங்குவது பற்றி இன்னும் தீர்மானம் செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் நிலையில் திருத்தந்தையின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் பற்றிய தகவல்கள் பிப்ரவரி 15, சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு மேல் வெளியிடப்படும் என்றும் மத்தேயு புரூனீ தெரிவித்தார்.