ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் Robert Fico அவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
ஏறக்குறைய 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் தனியாக உரையாடியபின் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் பரிமாறிக்கொண்டனர்.
சுட்டக் களிமண்ணில் செய்யப்பட்ட ‘இன்கனிவும் அன்பும்’ என்ற தலைப்பிலான ஒரு கவினைப் பொருள், இவ்வாண்டிற்கான அமைதி தினச் செய்தி, ‘இரும்புத் திரைக்குப் பின்னே உண்மைக்காக சித்ரவதைகளை அனுபவிக்கும் கிரேக்க கத்தோலிக்கர்’ என்ற தலைப்பிலான ஏடு ஆகியவைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஸ்லோவாக்கிய பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.
ஸ்லோவாக்கிய பிரதமரோ, புனிதர்கள் சிறில் மற்றும் மெத்தோடியசின் வெண்கலச்சிலைகள் அடங்கிய ஒரு கைவினைப் பொருளையும், ஸ்லோவாக்கிய கலைஞர் ஒருவர் மரப்பலகையில் வரைந்த காவல் தூதுவர் படம் ஒன்றையும் திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினார்.
திருத்தந்தையுடன் ஆன சந்திப்புக்குப் பின் ஸ்லோவாக்கிய பிரதமர் Robert Fico அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், நாடுகளுடனான உறவுகளுக்குரிய திருப்பீடத்துறையின் நேரடிச் செயலர் அருள்பணி Mirosław Wachowski ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
இந்த உரையாடலின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு குறித்தும், குடும்பம் மற்றும் கல்வி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அனைத்துலக விவகாரங்கள் குறித்த உரையாடலின்போது, உக்ரைனின் இன்றைய நிலைகள், அமைதிக்கான வாய்ப்புகள், இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே உருவான அமைதி ஒப்பந்தம் உறுதியின்றி இருப்பது, காசா பகுதியின் மனிதாபிமான அவசர நிலை போன்றவை குறித்து இரு தரப்பு அதிகாரிகளும் விவாதித்தனர்.