எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாம் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என திருஅவை நம்மை அழைக்கும் இந்த யூபிலி ஆண்டுக் கொண்டாட்டத்தில் நாம் உலக நோயுற்றோர் தினத்தைச் சிறப்பிக்கின்றோம் என டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக நோயுற்றோர் தினத்தையொட்டி குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இந்நாளில் நாம் இறைவனின் வார்த்தைகளான, ‘எதிர்நோக்கு நம்மை ஏமாற்றாது, நம் துயர வேளைகளில் அது நம்மை திடப்படுத்தும்‘ என்ற உலக நோயுற்றோர் தினத்திற்கான மையக்கருத்தையும் அதில் எடுத்தியம்பியுள்ளார்.
மேலும், அதே பிப்ரவரி 11ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள பிறிதொரு டுவிட்டர் குறுஞ்செய்தியில், நோயுற்றோருக்கும் நோயுற்றோர் மத்தியில் சேவையாற்றுவோருக்கும் திருஅவையின் நன்றியை வெளியிட்டு, அவர்கள் இந்த யூபிலி ஆண்டில் வழங்கிவரும் பங்களிப்பு முக்கியத்துவம் நிறைந்தது எனவும் கூறியுள்ளார்.
நோயுற்றோரும் நோயுற்றோரிடையே சேவையாற்றுவோரும் இணைந்து பயணிப்பது அனைவருக்குமான ஓர் அடையாளம், மனித மாண்பிற்கான ஒரு கீதம் மற்றும் எதிர்நோக்கின் ஒரு பாடல் என பாராட்டும் திருத்தந்தை, இவர்களுக்கு திருஅவை தன் நன்றியை வெளியிடுவதாகவும் மேலும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.