பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று 33ஆவது  உலக நோயுற்றோர் தினத்தினைச் சிறப்பிக்கின்றோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “எதிர்நோக்கு ஏமாற்றம் தராது. நமது துன்பத்தில் அது நம்மைப் பலப்படுத்துகின்றது” என்ற தலைப்பை இந்நாளுக்கான செய்தியில் வெளியிட்டிருந்தார். கடின நோயினால் நாம் வருந்தும்போதும் சரி, நமது அன்புக்குரியவர்கள் துன்பத்தில் வாடும்போதும் சரி, எல்லா நேரங்களிலும் கடவுளின் அருகிருப்பு நமக்கு தேவைப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டும் திருத்தந்தை, சந்திப்பு, கொடை, பகிர்தல் என்னும் மூன்று தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை அச்செய்தியில் பகிர்ந்துள்ளார்.

நாம் ஆழ்ந்து உற்று நோக்கினோமென்றால், நோய் என்பது நம் மனதை கடவுளை நோக்கி திருப்புகின்ற சந்திப்பின் தருணமாக மாறுகின்றது என்பதை உணர்வோம். துன்பமும் துயரமும் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ள நாம் நங்கூரமிடக்கூடிய அசைக்க முடியாத பாறை, நம்மை வலிமையாக்கும் ஓர் அனுபவம் என்றும், துன்பத்தினால் நாம் மீட்பின் மறைபொருளைக் கண்டடைகின்றோம், கடவுளிடமிருந்து வரும் ஆறுதலையும் நெருக்கத்தையும் கண்டுகொள்கின்றோம் என்றும் திருத்தந்தை சந்திப்பு பற்றி கூறும்போது எடுத்துரைத்துள்ளார்.

கொடை என்ற தலைப்பின் கீழ், துன்பத்தைப் போலவே, எல்லா நம்பிக்கையும் இறைவனிடமிருந்து வருகிறது, எனவே அது முதலில் வரவேற்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டிய ஒரு கொடை, பரிசு என்றும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் மட்டுமே நமது ஒவ்வோர் இலக்கும் நிலையான எல்லையற்ற அடிவானத்தில் அதன் இடத்தைக் காண்கிறது என்றும் நம் திருத்தந்தை எடுத்துரைக்கிறார் .

துன்பத்தை அனுபவிக்கும் மக்கள் வாழும் இடங்கள் பெரும்பாலும் பகிர்வின் இடங்களாக இருக்கின்றன என்பதையும், அங்கு நாம் ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டி வளப்படுத்தி நம்பிக்கையோடு இருக்க வலியுறுத்தப்படுகின்றோம் என்பதையும் நாம் அறிந்தே உள்ளோம். இதையே ‘பகிர்தல்’ என்ற தலைப்பின் கீழ் எடுத்துரைக்கும் திருத்தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகிய அனைவரும் கடவுளின் தூதர்களாக இருந்து, நம் துன்ப துயர்களை பகிர்ந்துகொள்பவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருஅவையின் உலக நோயாளர் தினம் என்பது, விழிப்புணர்வு தினம் என்பதையும் தாண்டி, அவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் தினமாக சிறப்பிக்கப்படுகிறது.

Our Lady of Lourdes, France

பிரான்சின் லூர்து நகரில் தோன்றிய அன்னை மரியாவின் திருவிழாவான பிப்ரவரி 11ஆம் தேதி உலக நோயுற்றோர் தினம் சிறப்பிக்கப்பட, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 33 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளை உருவாக்கினார் .

இந்நாளில் நாம் நோயுற்றோர் தினத்தைக் கொண்டாடவில்லை, ஏனெனில், நோயுற்றதைக் கொண்டாட எவரும் முன்வருவதில்லை. மாறாக, நோயுற்றோர் காட்டும் நம்பிக்கை, துணிவு இவற்றையும், நோயுற்றோர் மீது மற்றவர் காட்டும் அக்கறை, பரிவு இவற்றையும் நாம் கொண்டாடுகிறோம் என்பதுதான் உண்மை.

ஒருவர் நலம் அடைவதற்கு, முதலில், இறைவனின் அருள், இரண்டாவது, நோயாளியிடமும், அவரைச் சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை, மூன்றாவது, மருத்துவரின் திறன் என்ற இந்த மூன்றும் தேவை. “கடவுள் குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை மருத்துவர் வசூல் செய்கிறார்” என்று பெஞ்சமின் பிராங்ளின் கூறியதை நாம் கேள்விப்பட்டதில்லையா?

ஹென்றி மிச்செல் (Henry Mitchell) என்ற பேராசிரியர், கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர் தந்த பதில், பேராசியரை வியப்புறச் செய்தது. “முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியிருந்து, செபித்தவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள் குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே” என்று மருத்துவர் சொன்னதும், அவர் மிக அதிக அளவு தாழ்ச்சியுடன் பேசுவதாக பேராசிரியர் மிச்செல், அவரிடம் சொன்னார். மருத்துவரோ, மறுமொழியாக, “நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை. மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள் இருக்கும் கிருமிகளை நீக்குவது ஒன்றையே நாங்கள் திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை” என்று கூறினார்.

இத்தகைய நேரத்தில் நம் குடும்பங்களில் இருக்கும் நோயுற்றோர், வயது முதிர்ந்தோர் குறித்து கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். இறைவன் அவர்கள் அருகில் இருக்கிறார், அவர்களைக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை அவர்களில் எழ நாம் எவ்வகையிலாவது உதவியிருக்கிறோமா? அல்லது, நமக்குள் அந்த நம்பிக்கை வேரூன்றியுள்ளதா? அவர்கள் குணமாக நம்மால் உதவ முடியும் என எப்போதாவது உறுதியாக நம்பியிருக்கின்றோமா? நோயுற்ற நம் சகோதர சகோதரிகளுடன் உடனிருப்பது, அவர்களுடன் நாம் நேரம் செலவிடுவது மிக மிகப் புனிதமானது என்பதை நாம் உறுதியாக நம்பவேண்டும். நோயுற்ற ஒருவர் மீது நாம் காட்டும் அக்கறைதான் மிகப்பெரிய குணமளிக்கும் மருந்து. அதைத்தான் அன்னை தெரேசா செய்தார். அவர் உருவாக்கிய துறவு சபையும் அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறது. இன்று கத்தோலிக்கத்தின் பல துறவு சபைகள் நோயுற்றவர்களுக்கு குணமளிக்கும் உயரிய சேவைக்கென தங்களை அர்ப்பணித்துள்ளன.

உலகின் மிக உயரிய மருத்துவ இதழான  The Lancet என்பது 2015ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, உலகில் 95.7 விழுக்காட்டு மக்கள் ஏதாவது ஒரு வகையில் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வெறும் 4.3 விழுக்காட்டு மக்கள்தான் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி உள்ளனர். இது நாம் நம்மைச் சுற்றியேக் காணும் உண்மை. நம் உடலைச் சரியாகக் கவனிக்காததால், சத்து நிறைந்த உணவை உண்ணாததால் நம் உடலுக்கு நாமேத் தீங்கு விளைவிக்கின்றோம். இது நாம் நம் உடலுக்கு நேரடியாகச் செய்யும் தீங்கு என்றால் மறைமுகமாக இன்றைய நவீன உலகம் நலஆதரவிற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றது. ஓர் உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், சுற்றுச்சூழல் அழிவைக் குறிப்பிடலாம். மாரடைப்பு, சுவாசக் குழாய்-நுரையீரல் தொடர்புடைய நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றிற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு எந்த அளவிற்கு காரணமாகிறது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். சுற்றுச்சூழல் அழிவு எந்த அளவுக்கு நம் உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதை மருத்துவ ஆய்வுகளே தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. இவை ஒருபக்கம் என்றால், மறுபக்கமோ, தொற்றுநோய்களும், விஷக்காய்ச்சல்களும் மனித உயிர்களைப் பலிவாங்கி வருகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன் துவங்கி இரண்டாண்டுகளுக்கு மேலாக இவ்வுலகை ஆட்டிப்படைத்த கோவிட் பெருந்தொற்று நோய் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவரையில் 10 இலட்சத்திற்கு மேல் உயிர்களைப் பலிவாங்கிய பெருந்தொற்று நோய்கள் குறித்து காண்போமா?.

1918 விஷக்காய்ச்சல் என்று அறியப்படும் தொற்று நோயால் 1918 முதல் 20 வரை உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 70 இலட்சம் முதல் 10 கோடி வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது அப்போதிருந்த மக்கள் தொகையில் 1 முதல் 5.4 விழுக்காடு வரை. அடுத்து 541 முதல் 549 வரை இடம்பெற்ற ஜஸ்டினியன் பெருந்தொற்று நோயால் வடஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 இலட்சம் முதல் 10 கோடி வரை இருக்கலாம். அப்போதைய மக்கள் தொகையில் இது 25 முதல் 60 விழுக்காடு. 1981ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட  HIV/AIDSஆல் 2025, இன்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 இலட்சம். 2019 இறுதி முதல் இன்று வரை கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 இலட்சம் முதல் 3 கோடியே 65 இலட்சம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வரலாற்றில் கறுப்பு மரணம் என்றும், மெக்சிகோ பெருந்தொற்று, மெக்சிகோ பெரியம்மை, அந்தோனியன் பெருந்தொற்று, ரஷ்யன் பெருந்தொற்று, பெர்ஷியன், நேப்பிள்ஸ், இத்தாலி என்ற பெயரில் பெருந்தொற்றுகளும், ஜப்பான் பெரியம்மையும், காலரா நோய்களும் வந்து பல கோடிக்கணக்கானோரை பலிவாங்கியுள்ளன. அறிவியலில் மனிதன் வெகுவேகமாக முன்னேறிவிட்டான் என மார்தட்டிக் கொள்ளும் வேளையிலும், கோவிட் பெருந்தொற்று வந்து மனிதனின் கனவுகளைத் தகர்த்தது நாம் அறியாததல்ல.

மனிதனின் ஆயுட்காலம் அதிகரிப்பதையொட்டியும், அவனின் உடல்நலப்பாதிப்புக்கள், முதுமையின் காரணமாக அதிகரித்துவருவது உண்மை. இத்தகைய ஒரு நிலையில் உடல் நலத்தோடு இருப்போர், அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை உணர்ந்தவர்களாக நம் கடமைகளை அறிந்து ஒருவருக்கொருவர் உதவ வேண்டியது அவசியம். அன்னை தெரேசாக்கள் இன்னும் பல மடங்கு பெருகவேண்டும். அன்பையும் அக்கறையையும் நமக்குள்ளேயே வளர்த்துக் கொள்வது நம்மையே பண்படுத்த உதவும். நாம் நம் நலன் குறித்து பெரிய அளவில் அக்கறைக் கொள்வதுமில்லை, அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வதுமில்லை, நாம் நோயுற்றவர்களாக மாறும்வரை. நாமும் குணம்பெறுவோம் என்ற நம்பிக்கையை நமக்குள்ளும் பிறருக்குள்ளும் வளர்ப்போம். இறை நம்பிக்கையும், நம் மீதே நம்பிக்கையும், மருத்துவர் மீதான நம்பிக்கையும் இருந்தால் போதும், அனைத்தும் நலமாகும்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.