நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளின்மீது ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார் .
பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாள் திருப்பலியின் நிறைவில் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ்கூறினார் .
மோதல்களின்போது பன்னாட்டு மரபுகளைக் கடைபிடிப்பவர்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை மற்றும் புனிதமான வாழ்க்கையை மதிப்பவர்களாகவும் இராணுவம் காவல் மற்றும் பாதுகாப்புப் படையினர் இருக்கவேண்டுமே தவிர, நாடுகளின்மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது என்று திருத்தந்தை வலியுறுத்தினார் .
இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாளில் அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்கான தனது செப விண்ணப்பங்களையும் எடுத்துரைத்தார்.
போரினால் துன்புறும் நாடுகளுக்காக செபிப்போம், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மத்திய கிழக்கும் நாடுகள், மியான்மார், கீவ், சூடான் நாடுகளில் உள்ள மக்களுக்காக செபிப்போம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அமைதிக்காக செபிப்போம், எல்லா இடங்களிலும் ஆயுதங்கள் அமைதியடைந்து, அமைதிக்காகக் கண்ணீருடன் குரல் எழுப்பும் மக்களின் கூக்குரல் கேட்கப்படட்டும் என்றும் தெரிவித்தார்.
அமைதியின் அரசியாகிய தூய கன்னி மரியாவிடம் அமைதிக்கான நமது பரிந்துரையை எடுத்துரைப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மூவேளை செபத்தைத் தொடர்ந்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார்.