ஒன்றிணைந்து இருப்பதன் வழியாக மட்டுமே எதார்த்தத்தைப் பாதுகாக்கவும், அதன் உட்பொருளை விளக்கவும் முடியும் என்றும், ஒன்றிணைந்து இருந்தால் மட்டுமே நாம் மகிழ்வோடு வாழ முடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் .
பிப்ரவரி 8, சனிக்கிழமை இத்தாலியில் உள்ள பலேர்மோ பல்கலைக்கழக புதிய கல்வியாண்டின் தொடக்க விழாவிற்காக அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரவேற்றல், இணக்கத்துடன் வாழ்தல் போன்றவற்றை உள்ளடக்கியதே புரிதல் என்றும், திறந்த மனம், இதயம், எண்ணம் இல்லாவிடில் ஒவ்வொரு மனிதச்சூழலும் வாடிவிடும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஒன்றிணைந்து வாழ்தல் என்பது ஓர் முழக்கமாக இல்லாமல் அனுபவமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் மற்றவரிடமிருந்து பிரிக்கப்பட்டால் சிறந்த கருத்துக்கள் கூட அறிவற்றதாகி விடும் என்றும், வாழ்க்கை என்னும் கொடியிலிருந்து நம்மைப் பிரித்து, போர் மற்றும் மோதல்களுக்கு இட்டுச்செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அச்சமானது, மிகவும் கற்றறிந்த மக்களில் போட்டி, பொறாமை,பழிவாங்கும் மனப்பான்மை, கடினத் தன்மை ஆகியவற்றைத் தூண்டுகிறது என்றும், புதிய தொடக்கங்களை பாசாங்குத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கு, உறுதியான, தனிப்பட்ட மற்றும் நேர்மை தேவைப்படுகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார் .
மோதலை விட ஒற்றுமை ஓங்கவும், தனிப்பட்ட நலன்கள் மற்றும் விருப்பங்களை விட பொதுநலன்கள் மேலோங்கவும், நீதிக்கு இடமளிக்கும் எதிர்நோக்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், எதார்த்தத்தில் நம்மை மூழ்கடிக்கும் ஆய்வுக்கல்வியின் வழியாக இளையோர் இத்தகைய எதிர்நோக்கின் கதாநயகர்களாக இருக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் பெரிய கேள்விகளானது, கல்வி மற்றும் அதிகார மையங்களிலிருந்து அல்லாமல் விளிம்புகளிலிருந்து அதிகம் புரிந்து கொள்ளப்படுகின்றன என்றும், அறிவு மாசுபாடு, செயல்முறை மாசுபாடு, அறிவாற்றல் மற்றும் வளங்களை ஈர்க்கும் திறன் ஆகியவை, பெருமளவில், நகரத்தின் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் துணிவைப் பொறுத்தது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட சாதகமான சூழல் மற்றும் நிறுவன மண்டலங்களிலிருந்து வெளியேறும் இத்தகைய துணிவினால், சோகமான உணர்வுகளிலிருந்து நாம் மகிழ்ச்சியான உணர்வுகளுக்கு நகர்கிறோம் என்றும், அறிவாற்றல் மீண்டும் தூண்டப்படுகிறது, கல்வியும் வாழ்க்கையும் ஒருவருக்கொருவர் திறக்கப்படுகின்றது, புதுமை அதன் வழியை உருவாக்குகிறது, விரக்தி பின்வாங்குகிறது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார் .