திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 8 ஆம்தேதி கேரளாவில் உள்ள நெய்யாட்டிங்கரை மறைமாவட்டத்தின் இணை ஆயராக அருட்பணியாளர் டி.செல்வராஜன் (62) அவர்களை நியமித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் நீதி பரிபாலகராக பணியாற்றி வரும் இவர், 2019 முதல் திருபுரம் பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றி வருகிறார்.

வள்ளிவிளை என்னுமிடத்தில் ஜனவரி 27, 1962 அன்று பிறந்த இவர், ஆல்வாயில் உள்ள புனித யோசேப்பு பாப்பிறைக் கல்லூரியில் மெய்யியல் , இறையியல் முடித்து டிசம்பர் 23, 1987 அன்று திருவனந்தபுரம் லத்தின் ரீதி உயர் மறைமாவட்டத்திற்காக குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். லூவைனில் திருஅவைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பல்வேறு பங்குகளில் திறம்பட பணியாற்றியுள்ளார்.
நெய்யாற்றங்கரா மறைமாவட்டம் ஜூன் 14, 1996 அன்று திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக திருத்தந்தையின்ஆணையின் பேரில் உருவாக்கப்பட்டது. இம்மறைமாவட்டத்தின் ஆயராக மேதகு வின்சென்ட் சாமுவேல் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு இணை ஆயராக அருட்பணியார் செல்வராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஆயரின் பணி ஓய்வுக்குப் பிறகு இயல்பாக இவர் ஆயராக நிலைப்படுத்தப்படுவார்.