நாம் அனைவரும் கடவுள் நமக்குக் கொடுத்த அருள் மற்றும் இயற்கையின் கொடைகள் என்றும், கடவுளது நமக்காக வைத்திருக்கும் திருவுளம், மறைபொருளுக்குள் அச்சமின்றி நுழைந்து நம்மையே முழுவதும் இறைத்திருவுளத்திற்காக அர்ப்பணிப்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார் .
பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை முதல் 9 ஞாயிற்றுக்கிழமை வரை இஸ்பெயினின் (Madrid) மத்ரித்தில் “நான் யாருக்காக இருக்கின்றேன்”? – மறைப்பணி அழைத்தலுக்கான கூட்டம் என்ற தலைப்பில் நடைபெறும் தேசிய அழைத்தல் மாநாட்டிற்காக அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் .
நான் யாருக்காக இருக்கிறேன்? கடவுளுக்காக இருக்கிறேன் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் கடவுள், நாம் மற்றவர்களுக்காகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். பல குணநலன்கள், விருப்பங்கள், கொடைகள், மற்றும் வரங்களை நமக்காக அல்ல, பிறருக்காக நம்மில் வைத்திருக்கின்றார் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர் “நிலையான வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டதற்கு “கட்டளைகளைக் கடைபிடியும்” என்று இயேசு பதிலளித்த நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் விரும்பும் நன்மையானது, தேவைகளை நிறைவேற்றுவதன் வழியாகவும், இலக்குகளை அடைவதன் வழியாகவும் அடைய முடியாது என்பதை இயேசு தனது பதிலின் வழியாக எடுத்துரைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
கடவுளின் கட்டளைகளை நாம் நமது இளமைப் பருவத்திலிருந்தே செய்ய முயற்சித்திருந்தாலும், மிகவும் எளிமையான ஒன்றும், நமது வாழ்வின் ஒட்டுமொத்த கொடையுமாகிய, மிகச்சிறந்த அன்பின் சோதனையில் இயேசுவைப் பின்பற்றுவதை நாம் இழந்துவிடுகின்றோம் என்றும்திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
நற்செய்தியில் வரும் செல்வந்தரான இளைஞன், இயேசு தன்னை யாரிடம் அனுப்புகிறார் என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவில்லை என்றும், இயேசு அவர்களோடு இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்ற கவலை கொள்கின்றார் என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், செல்வந்தர் அவரிடம் உள்ளது, அவர் என்ன செய்தார், எதைப்பெற விரும்புகின்றார் என்பதை நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற வார்த்தையின் வழியாக வெளிப்படுத்துகின்றார் என்றும் கூறியுள்ளார்.
செல்வந்தரின் எல்லா வார்த்தைகளும் அவரிலேயே நிறைவுறுகின்றன, தன்னிறைவு பெற்றவராக அவர் இல்லை, தன்னிடம் ஏராளமான பொருள்கள் இருந்தாலும் அதனை மற்றவர்களுடன் பகிரும் குணம் இல்லாதவராக அந்த இளைஞர் இருந்தார் என்று தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், கடவுளது அழைத்தலை எப்படி ஏற்று செயல்படுத்துவது என்பதை அறியாதவராக அவர் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டானா பேரழிவில், புலம்பெயர்ந்தோரை வரவேற்றதிலும், லா பால்மாவின் எரிமலையினால் ஏற்பட்ட அழிவின்போது அம்மக்களுக்கு உதவச்சென்றதிலும் அனைத்து இளைஞர்களின் சான்றுள்ள வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், “நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார்” (உரோ. 13:8) என்ற இறைவார்த்தைக்கேற்ப வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாம் அனைவரும் கடவுள் நமக்குக் கொடுத்த அருள் மற்றும் இயற்கையின் கொடைகள் என்றும், நமது திறமைகளை வங்கியில் போட்டு அதற்கான வருவாயைப் பெறுவது போன்று, நமது நன்மைத்தனங்களை மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்துவதன் வழியாக நமது பலன்கள் பலரைச் சென்றடைய முடியும் என்றும் அச்செய்தியில் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார் .
கடவுள் நமக்காக வைத்திருக்கும் திருவுளம், மறைபொருளுக்குள் அச்சமின்றி நுழைந்து, நம்மையே முழுவதும் இறைத்திருவுளத்திற்காக அர்ப்பணிப்போம், கல்கத்தாவின் தூய அன்னை தெரசாவிற்கு உதவியதுபோல தூய ஆவி நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு உதவுவார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார் .
கடவுளிடமிருந்தும் சகோதர சகோதரிகளிடமிருந்தும் நம்மைப் பிரிக்கும் தூரங்களைக் குறைக்கவும், நமது பாதையை மாற்றவும், அனுப்பப்பட்டவரின் அரவணைப்பில் இயேசுவைக் கண்டறியவும் நமது வாழ்க்கைப் பயணத்தில் கடவுள் நம்மை வழிநடத்துவார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.