மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் செபத்திற்கான உலக நாள் ஏற்பாட்டாளர்களான ‘தலித்தா கும்’ என்ற கத்தோலிக்க அமைப்பின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பின் சேவைக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்துவதை தடுப்பதற்கு அர்ப்பணத்துடன் சேவையாற்றிவரும் இக்குழுவுடன் தானும் இணந்து கொள்வதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதக் கடத்தலில் அடிமையாக வாழ்ந்த புனித ஜோசபின் பகித்தா அவர்களின் திருவிழாவையொட்டி இச்சந்திப்பு இடம்பெறுவது பொருத்தமான ஒன்றே எனவும் கூறினார்.
அநீதி மற்றும் வன்முறைகளுக்கு உள்ளானோர் தங்கள் சங்கிலிகளை உடைத்தெறிந்து இறைவனின் அருள்வரத்துடன் நம்பிக்கையின் தூதுவர்களாக மாறமுடியும் என்பதை புனித ஜோசபின் பகித்தாவின் வாழ்வு நமக்கு காட்டி நிற்கின்றது என்ற திருத்தந்தை, பல இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் இந்த வியாபாரமும் அடிமைத்தனமும் நம் ஒவ்வொருவரின் பொறுப்புணர்வுகளை நமக்கு நினைவூட்டி, இத்தீமைகளுக்கு எதிராக உழைக்க நம்மைத் தூண்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மனிதர்களை வியாபாரப் பொருட்களாக மாற்றுவது, சிறு குழந்தைகள் உட்பட அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குவது, கட்டாயப் பணியமர்த்தல் போன்றவை அடிப்படை மனித உரிமை மீறல் மட்டுமல்ல, மனித குலத்திற்கே வெட்கக்கேடானது என திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் கூறினார்.
மனிதர்கள் வியாபாரப் பொருட்களாகக் கடத்தப்படுவதற்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ‘தலித்தா கும்’ அமைப்பின் இளம் அங்கத்தினர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அக்கறை எடுத்து அவர்களின் அனுபவங்களுக்கு செவிமடுத்து, அவர்களின் காயங்கள் குறித்து அக்கறை காட்டி, அவர்களின் குரல் சமுதாயத்தில் கேட்கப்பட நாம் உதவ வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.