இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு நாடும் ஒரு தனிப்பட்ட அன்னை மரியா பக்தியைக் கொண்டுள்ளது. அன்னை மரியாவை தங்கள் நாடுகளின் பாதுகாவலராக தனித்தனியாக அறிவித்து அவ்வன்னையை தங்களது நாட்டின் தனித்துவத்தோடு பிணைத்துள்ளனர். இந்நாடுகளில் போற்றப்படும் தேசிய அன்னை மரியா குறித்து மரபு வழியாகப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. தங்களின் துன்ப துயரங்களில் இவ்வன்னையிடம் தஞ்சம் புகுந்து தங்களை அர்ப்பணிக்கின்றனர் இந்நாடுகளின் மக்கள். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனெசுவேலா நாட்டின் பாதுகாவலர் Coromoto அன்னை மரியா.
ஏறக்குறைய 1591ஆம் ஆண்டில் வெனெசுவேலா நாட்டின் Portuguesa மாநிலத்தின் Guanare பகுதியை இஸ்பானியர்கள் சென்றடைந்தார்கள். அப்போது அப்பகுதியில் வாழ்ந்துவந்த Cospes என்ற பூர்வீக இன மக்கள் அப்பகுதியைவிட்டு, அந்நாட்டின் வட பகுதியிலிருக்கும் துக்குபிதோ ஆற்றுப்பக்கம் சென்று குடியேறச் சென்றனர். ஏனெனில் வெள்ளையர்களையோ அல்லது அவர்களது மதத்தையோ இப்பழங்குடி மக்கள் பின்பற்ற விரும்பவில்லை. வெள்ளையர்கள் நற்செய்தி அறிவித்ததை இவர்கள் எதிர்த்தார்கள். ஐம்பது ஆண்டுகள் கழித்து இம்மக்கள் இஸ்பானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்தாலும், இந்த மக்கள், இஸ்பானியர்களின் குடியிருப்பு நகரத்திலிருந்து சற்று தூரத்தில் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். இஸ்பானியர்களும், Cospes என்ற பூர்வீக இன மக்களும் அமைதியில் வாழ்ந்தாலும் 1651ஆம் ஆண்டுவரை ஒருவர் மற்றவரோடு தொடர்பின்றி தீவுகள்போல் வாழ்ந்து வந்தனர். ஏனெனில் இந்த 1651ஆம் ஆண்டில் Cospes என்ற பூர்வீக இனத் தலைவரும், அவரது மனைவியும் ஓர் அசாதாரணக் காட்சியைக் கண்டார்கள்.
துக்குபிதோ ஆற்றின் கால்வாய்த் தண்ணீரில் ஓர் அழகிய பெண் தங்களை அன்புடன் நோக்கியதை இந்தப் பூர்வீக இனத் தலைவரும், அவரது மனைவியும் கண்டனர். அப்பெண் மடியில் வைத்திருந்த சிறிய குழந்தையும் அவர்களைப் பார்த்து அன்புப் புன்னகையை உதிர்த்தது. இந்த அதிசயப் பெண் அத்தலைவரிடம், ‘உமது இன மக்களோடு இந்தக் காட்டைவிட்டு அந்த வெள்ளையர்களிடம் செல். அங்கு விண்ணகத்தில் நுழைவதற்கு உதவியாக, தலையில் தண்ணீர் ஊற்றி திருமுழுக்குப் பெற்றுக்கொள்’ என்று சொன்னார். இந்த அழகான பெண்ணைப் பார்த்தது, அப்பெண் கூறிய சொற்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ மதத்தில் தனது இனத்தவர் முழுவதும் சேருமாறுச் செய்தார் அப்பூர்வீக இனத்தலைவர் Cacique. ஆனால், இந்தப் பழங்குடி இனத் தலைவர் காட்டிலே வாழ்ந்து பழக்கப்பட்டதால், காட்டில் சுதந்திரமாக வாழப் பழகியிருந்ததால், புதிய வாழ்வுமுறையில் தன்னை ஈடுபடுத்த அவரால் இயலவில்லை. எனவே, அவர் தனது குடும்பத்துடன் தனது சொந்தக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். இச்சமயம் அன்னைமரியா அத்தலைவரின் எளிய குடிசையில் காட்சியளித்தார். அன்னைமரியாவை முழுவதும் சூழ்ந்திருந்த ஒளிக்கதிர்கள் அக்குடிசையை பிரகாசமாக்கின. இப்படிச் செய்தும் அன்னைமரியாவால் அவரின் மனதை மாற்ற இயலவில்லை. அதற்கு மாறாக அந்தத் தலைவர் அந்தப் பெண்ணை அச்சுறுத்துவதற்கு தனது ஆயுதங்களை எடுத்தார். அப்பெண்ணைப் பிடிப்பதற்காகக் மிகவும் கோபமாக தனது கையை நீட்டியபோது அப்பெண் அவரின் கண்களுக்கு முன்பாகவே மறைந்துபோனார். ஆனால் மூடியிருந்த அவரின் உள்ளங்கைகளுக்கு இடையில் அன்னைமரியின் உருவம் பதிந்த ஓர் அட்டை இருந்தது. இக்காட்சி 1652ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நடந்தது.
அந்தப் புனித அட்டை 27 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 22 மில்லி மீட்டர் அகலத்தைக் கொண்டிருந்தது. அந்த அட்டை ஒரு மெல்லிய தாளால் செய்யப்பட்டிருந்தது. புனித கன்னி மரியா அரியணையில் அமர்ந்திருப்பதுபோலவும், அவரது மடியில் குழந்தை இயேசு அமர்ந்திருப்பது போலவும் அந்த உருவம் பதிந்திருந்தது. பழங்குடி இனத்தவர் பயன்படுத்தும் மை மற்றும் கூர்மையான எழுதுகோலால் அது வரையப்பட்டதுபோல் இருந்தது. அப்படத்தில் அன்னைமரியா கருஞ்சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கியை அணிந்திருந்தார். குழந்தை இயேசு வெண்மை நிற உடுப்பை அணிந்திருந்தார். இந்தத் திருவுருவம் ஆபரணங்களால் அழகுசெய்யப்பட்டு ஒரு பெரிய கதிர்ப்பாத்திரத்தில் வைக்கப்பட்டு மக்களின் வணக்கத்துக்கு வைக்கப்பட்டது. வெனெசுவேலா ஆயர்களின் வேண்டுகோளின் பேரில் 1944ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி திருத்தந்தை 12ஆம் பயஸ் கொரோமோத்தோ அன்னைமரியை வெனெசுவேலா நாட்டுப் பாதுகாவலராக அறிவித்தார். அத்தாய் காட்சி கொடுத்ததன் மூன்றாம் நூற்றாண்டையொட்டி 1952ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இவ்வன்னைக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டது. திருத்தந்தையின் பிரதிநிதியாக ஹவானா பேராயர் மானுவேல் பெட்டான்கூட், கொரோமோத்தோ அன்னைமரியாவுக்கு முடிசூட்டினார்.
வெனெசுவேலா மக்கள் கொரோமோத்தோ அன்னையின் விழாவை ஒவ்வோர் ஆண்டும் மூன்று தருணங்களில் சிறப்பிக்கின்றனர். 1949ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதியன்று திருத்தந்தை 12ஆம் பயஸ் இத்திருத்தலத்தைப் பசிலிக்காவாக அறிவித்தார். இப்பசிலிக்கா வெனெசுவேலாவின் Guanareல் உள்ளது.
அன்னை ஓர் அதிசயம் – 33 பேரின் அன்னைமரியா, உருகுவாய்(Our Lady of the Thirty Three, Uruguay)
தென் அமெரிக்கக் கண்டத்தில், தென்கிழக்கில் அமைந்துள்ளது உருகுவாய் நாடு. புவியியல் அமைப்பின்படி இந்நாடு தென் அமெரிக்காவில் இரண்டாவது சிறிய நாடாகும். 1516ஆம் ஆண்டில் இஸ்பானியரான Juan Díaz de Solís என்பவர் உருகுவாயைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் இங்கு Charrua என்ற சிறு பூர்வீக இனமே வாழ்ந்து வந்தது. இஸ்பானிய ஆக்ரமிப்பின் இடையில் 1680க்கும் 1683க்கும் இடைப்பட்டக் காலத்தில் போர்த்துக்கீசியரின் கீழும் உருகுவாய் இருந்தது. இஸ்பெயின், அர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே 1811க்கும் 1828ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்குப்பின் உருகுவாய் நாடு முழு விடுதலையடைந்தது. (1811ல் இஸ்பெயினிடமிருந்து சுதந்திரமடைந்தது. பின்னர் 1825ல் பிரேசிலிடமிருந்து சுதந்திரமடைந்து அர்ஜென்டினா நாட்டோடு மூன்றாண்டுகள் கூட்டாட்சி நாடாக இருந்து 1828ல் தனி சுதந்திர நாடாக மாறியது).
Treinta y Tres Orientales, அதாவது 33 கிழக்குப் பகுதியினர் என்பது, உருகுவாய் நாட்டில் பிரேசில் பேரரசுக்கு எதிராக தளபதி Juan Antonio Lavalleja என்பவரின் தலைமையில் கிளர்ந்தெழுந்த ஓர் இராணுவ புரட்சி அமைப்பாகும். இந்த இராணுவ அமைப்பு 33 பேரைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போதைய உருகுவாய் நாடு, பிரேசில் நாட்டின் Rio Grande do Sul என்ற தென் மாநிலத்தையும் உள்ளடக்கிய கிழக்கு மாநிலத்தின் விடுதலைக்காக, 1825ஆம் ஆண்டில் Treinta y Tres Orientales என்ற இந்த புரட்சி அமைப்பின் வழி பிரேசில் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது. அது தற்போதைய நவீன உருகுவாய் நாடு உருவாகுவதற்கு அடித்தளம் இட்டது. இந்த இராணுவப் புரட்சி அமைப்பின் 33 பேரும் உருகுவாய் நாட்டுப்பற்றாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். 1825ஆம் ஆண்டு இந்த 33 பேரும் தங்கள் நாட்டின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக Agraciada கடற்கரையில் வந்திறங்கினர். அவர்கள் உருகுவாயின் Florida நகருக்குச் சென்றபோது அங்கிருந்த சிற்றாலயத்துக்குச் சென்று தங்கள் நாட்டின் எதிர்காலத்தை அங்கிருந்த அன்னைமரியாவிடம் அர்ப்பணித்தனர். உருகுவாய் நாட்டின் தேசிய விடுதலை நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. அந்நாட்டின் அரசியல் அமைப்பின் நீதிமன்ற உறுப்பினர்கள், சுதந்திர அறிவிப்பு ஆணையில் கையெழுத்திட்டு அதனையும் தங்களையும் இந்த அன்னைமரியாவின் திருவுருவத்திடம் அர்ப்பணித்ததுடன் தங்கள் நாட்டையும் அந்த அன்னைமரியாவின் பாதுகாவலில் ஒப்படைத்தனர்.
அன்றிலிருந்து உருகுவாய் நாட்டினர் இந்த அன்னைமரியாவை, 33 பேரின் அன்னைமரியா என அழைக்கலாயினர். மரத்தால் செய்யப்பட்ட இச்சிறிய அன்னைமரியா திருவுருவம், 18ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் உருகுவாய் நாட்டில் இயேசு சபையினரின் மறைப்பணிகளோடு தொடர்புடையது. இத்திருவுருவம், அக்காலத்தில் இயேசு சபையினரின் மறைப்பணித்தளங்களில் புகழ்பெற்றிருந்த Guarani பூர்வீக இனத்தவரின் கைவேலைப்பாடுகளில் ஒன்றாகும். இயேசு சபையினரின் கண்காணிப்பில் இருந்துவந்த Pintado என்ற சிறிய கிராமத்தில் இருந்த சிற்றாலயத்தில் 1779ஆம் ஆண்டுவாக்கில் இந்த அன்னைமரியா திருவுருவம் வைக்கப்பட்டது. பின்னர் இந்த முழுக் கிராமமும் தற்போதைய Florida நகரம் இருக்கும் இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அச்சமயத்தில் அக்கிராமத்தினர் தங்கள் மூதாதையர் வணங்கிய இந்த அன்னைமரியா திருவுருவத்தையும் தங்களோடு எடுத்துச் சென்றனர். கிழக்குப் பகுதியின் விடுதலைக்காகப் போராடிய அந்த 33 பேரும் அவ்வாலயத்துக்கு வந்து அவ்வன்னையிடம் செபித்து நாட்டின் வருங்காலத்தை அர்ப்பணித்ததாலும், இவர்கள் அக்காலத்திய கிழக்குப் பகுதியின் விடுதலைக்காகப் போராடியதாலும் இவ்வன்னைமரியா 33 பேரின் அன்னைமரியா எனவும், 33 கிழக்குப் பகுதியினரின் அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறார்.
1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உருகுவாய் நாடு, தனது சுதந்திரத்தின் 150ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்தபோது இந்த 33 பேரின் அன்னைமரியா திருவுருவமும், இந்தச் சிற்றாலயமும் “வரலாற்று நினைவுச் சின்னங்களாக” அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த 33 பேரின் அன்னைமரியா திருவுருவம் 36 செ.மீ. உயரமுடையது. அதைப் போர்த்தியுள்ள மேலாடையும், அதன் பல மடிப்புகளும், அதைச் சுற்றியுள்ள வண்ணச் சிறு கயிறுகளும் அத்திருவுருவம் அசைந்துகொண்டே இருப்பதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. “உருகுவாய் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த” இவ்வன்னை மரியா 1857ஆம் ஆண்டு முதல் விலைமதிப்பற்ற கற்களைக் கொண்ட தங்கக் கிரீடத்தை அணிந்திருக்கிறார். அந்த 33 பேரின் இரண்டாவது தலைவரால் இக்கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டது. புனித திருத்தந்தை 23ஆம் ஜானின் அனுமதியின்பேரில் 1961ஆம் ஆண்டில் 33 பேரின் அன்னைமரியா திருவுருவம் திருஅவையின் முறைப்படி முடிசூட்டப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் இவ்வன்னையை “உருகுவாய் நாட்டின் பாதுகாவலர்” எனவும் அறிவித்தார் திருத்தந்தை 23ஆம் ஜான். 33 பேரின் அன்னைமரியா திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.