Reported by Fr. Gnani Raj Lazar
2025 ஜூலை மாதம் 27ஆம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள ஐந்தாவது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் ‘நம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர்’ (சீரா 14:2) என்ற சீராக் புத்தக வார்த்தைகளைத் தேர்ந்துள்ளார் .
திருத்தந்தையின் இத்தலைப்பை வெளியிட்டுள்ள திருப்பீடத்தின் பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான துறை, 2021ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட இந்த தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினம், இந்த யூபிலி ஆண்டில் முதியோர் எவ்விதம் குடும்பங்களிலும் திருஅவை சமூகங்களிலும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழமுடியும் என்பதை இத்தலைப்பின் வழி காட்டி நிற்கிறது எனத் தெரிவிக்கிறது.
பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடத்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இந்த நாள் சிறப்பான விதத்தில் கொண்டாடப்பட்டு, தலைமுறைகளுக்கு இடையேயான சந்திப்பை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பை புதுப்பிப்பதாக இருக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.