“அனைத்து மக்களிடையே எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக!” என்ற 2025-ஆம் ஆண்டிற்கான உலக மறைபரப்பு நாள் மையக்கருத்தானது, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில், திருத்தூதர்களாகவும், எதிர்நோக்கை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நமது அடிப்படை இறையழைத்தலை தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், திருமுழுக்குப் பெற்றவர்களின் சமூகமான முழு திருஅவைக்கும் நினைவூட்டுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
பிப்ரவரி 6, வியாழக்கிழமைன்று வழங்கியுள்ள இவ்வாண்டுக்கான உலக மறைபரப்பு நாள் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் “உயிருள்ள எதிர்நோக்கிற்கு” புதுப்பிறப்பளித்த உண்மையுள்ள கடவுளின் அருளின் காலமாக இது அனைவருக்கும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் உரைத்துள்ளார் (ஒப். 1 பேதுரு 1:3-4).
இங்கே, நமது கிறிஸ்தவ மறைபரப்புப் பணி அடையாளத்தின் சில தொடர்புடைய சிறப்புகளை தான் குறிப்பிட விரும்புவதாக உரைத்துள்ள திருத்தந்தை, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நம் எதிர்நோக்கு, கிறிஸ்தவர்கள், எல்லா மக்களிடையேயும் எதிர்நோக்கைத் தாங்குபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள், எதிர்நோக்கின் பணியை புதுப்பித்தல் ஆகி மூன்று முக்கிய தலைப்புகளில் தனது உலக மறைபரப்பு நாள் சிந்தினைகளை விரிவுபடுத்தியுள்ளார்.
01. கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நம் எதிர்நோக்கு
“கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நம் எதிர்நோக்கு” என்னும் இம்முதல் தலைப்பில், திருத்தந்தை, கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் கிறிஸ்துவின் பங்கை வலியுறுத்தும், நம்பிக்கையின் என்றுமுள்ள ஆதாரமாக கிறிஸ்துவைப் பிரதிபலித்துள்ளார் .
நற்செய்தியை அறிவிக்கவும், நோயாளர்களைக் குணப்படுத்தவும், குறிப்பாக, ஏழைகளுக்கு அவர்தம் எதிர்நோக்கை மீட்டெடுக்கவும் பணியாற்றிய இயேசுவை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, மனித சோதனைகளை எதிர்கொண்ட போதிலும், இயேசு எல்லாவற்றையும் இறைத்தந்தையிடம் ஒப்படைத்தார் எனவும், எதிர்நோக்கின் இறுதி மாதிரியாக அவர் மாறினார் எனவும் எடுத்துக்காட்டியுள்ளார்.
கிறிஸ்து தனது சீடர்கள் மூலம் இந்தப் பணியைத் தொடர்கிறார் என்றும், துன்பப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை அணுகுகிறார் என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, திருஅவை என்பது குறைபாடு உள்ளதாக இருந்தாலும், கிறிஸ்துவின் அன்பையும் எதிர்நோக்கையும் உலகெங்கும் பரவச் செய்வதில் உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் விசுவாசிகள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள், என்றும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவர்கள் எதிர்நோக்கின் தூதுவர்களாக மாறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
02. கிறிஸ்தவர்கள், எல்லா மக்களிடையேயும் எதிர்நோக்கைத் தாங்குபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள்
“கிறிஸ்தவர்கள், எல்லா மக்களிடையேயும் எதிர்நோக்கைத் தாங்குபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள்” என்னும் இந்த இரண்டாவது தலைப்பில், மக்களின் உண்மையான வாழ்க்கைப் போராட்டங்களில் ஈடுபடுவதன் வழியாகவும், எதிர்நோக்கைத் தாங்கிச் செல்வதன் வழியாகவும், நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை விளக்கியுள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தால் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்தவர்கள், குறிப்பாக மறைப்பணியாளர்கள், இயேசு கிறிஸ்து கட்டளையிட்டபடி அனைத்து மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமையை நினைவுபடுத்துகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவின் மீட்பு என்பது இம்மண்ணுலகுக்குரிய கவலைகளைக் கடந்து, கடவுளின் விண்ணுலக வாழ்விற்குச் செல்வதற்கு வழிவகுக்கும் என்று மொழிந்துள்ளார்.
தனிமை மற்றும் பொருள்முதல்வாதத்தால் பெருகிய முறையில் குறிக்கப்பட்ட இவ்வுலகில், கிறிஸ்தவச் சமூகங்கள் உண்மையான உறவுகளை வளர்க்கவும், ஏழைகள், முதியவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு இரக்கத்துடனும் நெருக்கத்துடனும் உதவிடவும் வலியுறுத்தப்படுகின்றன என்று உரைத்துள்ளார்.
மேலும் கிறிஸ்துவின் அன்பை உருவகப்படுத்துவதன் வழியாக, விசுவாசிகள் மனிதகுலத்தின் நம்பிக்கை மற்றும் இணைப்பு உணர்வை மீட்டெடுக்க முடியும் என்றும், அவர்கள் கடவுளின் இரக்கத்தின் உண்மையான சான்றுகளாக மாற முடியும் என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டியுள்ளார் .
03. எதிர்நோக்கின் பணியை புதுப்பித்தல்
இறுதியாக, “எதிர்நோக்கின் பணியை புதுப்பித்தல்” என்ற மூன்றாவது தலைப்பில், கிறிஸ்துவின் சீடர்களுக்கு எதிர்நோக்கின் அவசரப் பணியைக் குறித்து வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, அவர்களை நம்பிக்கையின் “கைவினைஞர்கள்” மற்றும் மனிதகுலத்தை மீட்டெடுப்பவர்கள் என்று அழைத்துள்ளார்.
மேலும் இங்கே உயிர்த்தெழுதல் ஆன்மிகத்தின் (Easter spirituality) முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, குறிப்பாக, திருநற்கருணை மற்றும் உயிர்ப்பின் முத்திருநாள்களை (Easter Triduum), புதுப்பித்தல் மற்றும் வலிமைக்கான ஆதாரங்களாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, ஒரு “வசந்த காலத்தின் மக்கள்” என்ற முறையில், கிறிஸ்தவர்கள் தூய ஆவியாரால் உரிமையளிக்கப்பட்டவர்களாக பேரார்வமுடன் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டிள்ளார்.
இறைவேண்டல் இந்தப் பணியின் மையமாக உள்ளது, ஏனெனில் இது எதிர்நோக்கை நிலைநிறுத்துகிறது மற்றும் செயலை ஊக்குவிக்கிறது என்றும், திருப்பாடல்கள், குறிப்பாக, விடாமுயற்சியையும் இறைநம்பிக்கையையும் கற்பிக்கின்றன என்றும் திருத்தந்தை மொழிந்துள்ளார் .
நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு சமூகச் செயல்முறையாகும் என்றும், இது விசுவாசத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி தேவைப்படுவதையும், ஒன்றிணைந்த பயணத்தின் மறைபரப்புப் பணி (missionary synodality) மற்றும் விசுவாசிகளை வழிநடத்துவதில் திருஅவையின் பங்கையும் வலியுறுத்துகிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார் .
இறைவேண்டல், தியாகம் மற்றும் தாராள மனப்பான்மை வழியாக, திருஅவையின் பணியில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை, இந்த எதிர்நோக்கின் பணியை அன்னை மரியாவிடம் ஒப்படைப்பதாகவும் கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது உலகிற்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்திட வேண்டும் எனவும் கூறி, தனது உலக மறைபரப்பு நாள் செய்தியை திருத்தந்தை நிறைவுசெய்துள்ளார் .