ஸ்பெயின் நாட்டின் கொர்தோபா குருமட சமூகத்தின் ஏறக்குறைய 65 பிரதிநிதிகளை ஜனவரி 17, வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்து அவர்களோடு உரையாடினார்.
இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணியாக உரோம் நகர் வந்துள்ள இச்சமூகத்தின் பாதைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் நாம் நம் திசையைக் குறித்து, அதாவது, இயேசுவை சந்தித்து உரையாடவிருக்கும் வானுலகம் குறித்து சிந்திக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

முதலிடத்தையோ, துன்பமற்ற இடங்களையோ நாம் தேடி ஓடுபவர்களல்ல, ஏனெனில் அவை வெளியேற முடியாத முட்டுச்சந்துக்கள் என்ற திருத்தந்தை, அத்தகைய ஒரு சூழலில் நாம் சிரமத்துடனும் வெட்கத்துடனும் பின்னோக்கி வர தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இரண்டாவது அடையாளமாக, சாலையின் ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, எந்த ஒரு சூழலிலும் நம்பிக்கையின் துணையுடன் நாம் சான்றுகளாக விளங்கமுடியும், ஏனெனில், இயேசு நம் துணையிருந்து நாம் நம்பிக்கையை விதைப்பவர்களாக செயல்படுவதற்கான பலத்தை வழங்குகிறார் என்றார்.
மூன்றாவது அடையாளமாக, நம்மை ஊக்கப்படுத்தும் பகுதிகள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகருக்கு அவர்களைக் கொணர்ந்துள்ள இந்த திருப்பயணம், புனித கதவு வழியாகச் செல்வதன் மூலமும், அப்போஸ்தலர்களின் கல்லறைகளை தரிசிப்பதன் வழியாகவும் ஊக்கத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்குகின்றது என்றார்.
நமது தலைவரும் ஆண்டவருமாக இருக்கும் இயேசு அவரின் வார்த்தைகள் வழியாகவும், திருநற்கருணை வழியாகவும் தன்னை நமக்கு வழங்குவதுடன், நாம் பாதையில் சோர்வுறும்போது நம் சோர்வை நீக்க உதவுகிறார் என்ற திருத்தந்தை, இத்தகைய நம்பிக்கைகளுடன் சிலுவையை அணைத்தவர்களாக முன்னோக்கி நடந்து செல்வோம் என கேட்டுக்கொண்டார்.