வாஷிங்டனின் ரொனால்டு ரீகன் தேசிய விமானதளத்தில் ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு இரங்கல் தந்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.
அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமும் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும் மோதிக்கொண்டதில் இரண்டிலும் இருந்தவர்கள் எவரும் உயிர் பிழைக்காத நிலையில், இதுவரை 40 உடல்களே மீட்கப்பட்டுள்ளன.
விமானத்தில் 64 பேரும் ஹெலிகாப்டரில் 3 பேரும் இருந்த நிலையில், போட்டோமாக் ஆற்றின் மேல் நடந்த இந்த விபத்துக்குப்பின், உடல்களை நீரிலிருந்து மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
புதன் இரவு இடம்பெற்ற இந்த விபத்து குறித்து வியாழனன்று அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களை இறைவனின் கைகளில் ஒப்படைப்பதாகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு தன் ஆழமான அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அதில் கூறியுள்ளார்.
இந்த விபத்துத் தொடர்புடைய மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கும் ஆறுதல் மற்றும் தாங்கும் சக்திக்குத் தேவையான இறையாசீரை இறைஞ்சுவதாகவும் தன் இரங்கல் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் கூறியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் கேன்சஸ் மாநிலத்தின் விச்சிட்டா நகரிலிருந்து பனிச்சறுக்கு வீரர்கள் உட்பட 60 பயணியரையும் 4 விமானப் பணியாளர்களையும் கொண்டிருந்த விமானம், இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 3 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்றுடன் மோதியதில் 67 பேரும் உயிரிழந்தனர்.