டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ’அழகின் தீவு’ என்று அழைக்கப்படும் கோர்சிகா தீவுக்குத் தனது 47-வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்ப்பகம் அறிவித்துள்ளது.
கோர்சிகா தீவுக்கு செல்லும் திருத்தந்தை, அங்குத் திருநிலையினர் குழாமையும், பொதுநிலை விசுவாசிகளையும் சந்திப்பதற்கு முன்பு மத்தியதரைக்கடல் பகுதியில் இடம்பெறும் மதம் சார்ந்த மாநாடு ஒன்றில் பங்கேற்கிறார்.
மேலும் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் உட்பட மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளின் ஆயர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றுவார்.
இது பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயணம் ஆகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இங்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரெஞ்சு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் ஏறத்தாழ 40 நிமிடங்கள் கலந்துரையாடவுள்ளார்.
கோர்சிகாவின் தலைநகரான அஜாக்ஸியோவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை ஆகும். இதற்கு முன்பு திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள், 1952-ஆம் ஆண்டு பாரிஸில் திருப்பீடத் தூதராக இருந்தபோது இத்தீவிற்குப் பயணம் செய்தார்.