கருக்கலைத்தலை அனுமதிப்பதற்கும் பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தாய்மை அடைவது ஒரு தடையல்ல, மாறாக, வரம்.
பெண்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும், கருக்கலைத்தலை ஊக்குவிப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உரைத்துள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.
ஐரோப்பிய ஒன்றிய அவையில் அடிப்படை உரிமைகள் குறித்த ஆவணத்தில் கருக்கலைத்தலை அனுமதிக்கும் உரிமையை இணைக்க ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தினர்கள் முயற்சித்துவரும் வேளையில், கருக்கலைத்தலுக்கும் கொள்கை திணிப்பிற்கும் தங்கள் எதிர்ப்பை ஓர் அறிக்கை வழி தெரிவித்துள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.
கருக்கலைத்தலை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்து ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை ஐரோப்பிய பாராளுமன்றம் விவாதிக்க உள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், கருக்கலைத்தலை அனுமதிப்பதற்கும் பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உரைத்துள்ளதோடு, தாய்மை அடைவதை ஒரு தடையாக நோக்காமல் அதனை ஒரு வரமாகக் காணவேண்டும் என உரைத்துள்ளனர்.
ஒரு தாயாக இருப்பது என்பது தனிப்பட்ட, சமூக மற்றும் தொழில் சம்பந்தப்பட்டவைகளில் ஒரு தடைக்கல்லாக இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, கருக்கலைத்தலை ஊக்குவிப்பதே பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிராகச் செல்கிறது என மேலும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
கருக்கலைத்தல் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாக இருக்கமுடியாது, மாறாக, வாழ்விற்கான உரிமையை, அதிலும் குறிப்பாக கருவில் வளரும் குழந்தைகளின் வாழ்வதற்கான உரிமையை மதிப்பதே அடிப்படை உரிமை என தங்கள் அறிக்கையில் கூறும் ஆயர்கள், இதில் புலம்பெயர்ந்தோர், முதியோர், நோயுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளும் அடங்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.