நமது சமூகங்களுக்குள் உள்ள பல்வேறு நம்பிக்கைகளை மதிக்கும் அமைதியான, உள்ளடக்கிய மற்றும் இணக்கமான சூழலை வளர்ப்பதற்கு உதவுவோம் : கார்லிட்டோ கால்வேஸ் ஜூனியர்
பெந்தக்கோஸ்து ஞாயிறன்று, காலை 10.30 மணியளவில் பிலிப்பீன்சின் Cotabato நகரில் உள்ள சான்டோ நினோ கோவிலில் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வேளை, நமது பாதுகாப்பு, இராணுவம் மற்றும் புலனாய்வுப் படைகள் குற்றவாளிகளை வெளியேற்றி நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார் ஓய்வுபெற்ற முன்னாள் கர்தினால் Orlando Quevedo
அதேவேளை, இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான அரசுத் தலைவரின் ஆலோசகர் அலுவலகத்தின் தலைமைச் செயலாளர் கார்லிட்டோ கால்வேஸ் ஜூனியர் (Carlito Galvez Jr) அவர்கள், கத்தோலிக்கர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான பெந்தக்கோஸ்து ஞாயிறன்று நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான வன்முறையானது, மதச் சுதந்திரம் மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான பிலிப்பீன்ஸ் மக்களின் அர்ப்பணிப்பு மீதான நேரடித் தாக்குதலாகும் என்று வர்ணித்துள்ளார்.
இந்த எதிர்பாராத நிகழ்வின்போது, Cotabato நகரம் மற்றும் Bangsamoro பகுதியின் கத்தோலிக்க சமூகம் முழுவதுடனும் நாங்கள் ஒன்றித்திருக்கின்றோம் என்று கூறியுள்ள கால்வேஸ் அவர்கள், அச்சம், பகைமை மற்றும் அவநம்பிக்கையை விதைப்பதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லாத இந்தப் பயங்கரவாதச் செயல், பேங்சமோரோவில் நீடித்த அமைதி, ஒருவருக்கொருவர்மீதான புரிதல் மற்றும் ஒற்றுமையை அடைவதற்கான நமது உறுதியைக் குறைக்கவோ அல்லது வீணடிக்கவோ முடியாது என்பதில் மிகவும் உறுதியாக இருங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற அவலங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும், மேலும் நமது சமூகங்களுக்குள் உள்ள பல்வேறு நம்பிக்கைகளை மதிக்கும் அமைதியான, உள்ளடக்கிய மற்றும் இணக்கமான சூழலை வளர்ப்பதற்கு உதவுவோம் என்று மேலும் கூறினார் கால்வேஸ்.
Cotabato நகரம் முஸ்லீம் Mindanao உள்ள Bangsamoro தன்னாட்சி பகுதியில் உள்ளது, இது “Bangsamoro” என்று அழைக்கப்படுகிறது, இது அண்மைய ஆண்டுகளில் மதச் சுதந்திர சவால்களை அனுபவித்து வரும் ஒரு பகுதியாகும். (Catholic News)