“நாங்கள் சிரியரின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன”

தொழு நோயாளர்கள் ஒருவர் ஒருவரிடம், “இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை இதை வெளியிடாது மௌனமாய் இருந்தால், நாம் குற்றவாளிகள் ஆவோம். வாருங்கள்! நாம் போய் அரச மாளிகையில் இதை அறிவிப்போம்” என்று சொல்லிக்கொண்டனர். எனவே அவர்கள் சென்று நகர வாயிற் காவலனை அணுகி, “நாங்கள் சிரியரின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன” என்று தெரிவித்தனர். வாயிற் காவலர் இதை உரத்த குரலில் சொல்ல, அது உள்ளே அரச மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டது.

அரசன் இரவிலேயே எழுந்து தன் பணியாளரை நோக்கி, “சிரியர் நமக்கு எதிராகச் செய்துள்ளதைக் கேளுங்கள்; நாம் பட்டினியால் வருந்துவதை அறிந்து, அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, ‘இஸ்ரயேலர் நகரிலிருந்து வெளியேறுவார் அப்பொழுது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு நகரினுள் நுழையலாம்’ என்று எண்ணி வயல்வெளிகளில் ஒளிந்திருக்கின்றனர்” என்றான்.