மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ம் நாளை உலக மலேரியா நாளாக அறிவித்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகில் மலேரியா நோய்த்தொற்றால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 வயதுகுட்பட்ட ஒரு குழந்தை இறக்கின்றது என்றும்,  ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் யுனிசெஃப் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 25 வியாழன் உலக மலேரியா நாளன்று, மலேரியா நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளார் யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பின் இத்தாலிய செய்தித்தொடர்பாளர் அந்த்ரேயா யாக்கோமினி.

மலேரியா நோய் மற்றும் அதன் சிகிச்சைக்கான செலவுகள் குடும்பங்களை நோய், துன்பம் மற்றும் வறுமை நிலைக்குள் இழுத்துச் செல்கிறது என்றும், இன்று, உலக மக்கள்தொகையில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் ஆப்ரிக்காவின் துணை-சஹாரா  பகுதியில் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில், உலகளவில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட, 24,90,00,000 பேர்களில் ஏறக்குறைய 6,08,000 பேர் இறந்துள்ளனர் என்றும், இந்த இறப்புகளில், 76 விழுக்காடு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும், நாளொன்றிற்கு 5 வயதுக்குட்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மலேரியாவால் இறக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் ஏறக்குறைய 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 330 கோடி மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.

மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டு  ஏப்ரல் 25 ம் நாளை உலக மலேரியா நாளாக அறிவித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்