நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து பணிவோடும் மரியாதையோடும் பகிருங்கள், (1 பேதுரு 3:15-16) என்ற புனித பேதுரு அவர்களின் முதல் திருமடல் வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு 59வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.
தவறான தகவல்கள் மற்றும் தனியார்களுக்கு சாதகமாக வளைக்கப்படும் செய்திகள் போன்றவை இன்றைய அதிகார கட்டுப்பாடுகளுக்கு மையமாக பயன்படுத்தப்படும் சூழலில், சமூகத்தொடர்பாளர்களின் பணி எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தது என்பதை அறிந்தே உள்ளேன் என தன் செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு சமூகத்தொடர்பாளரும் ‘எதிர்நோக்கின் தகவல் தொடர்பாளராக’ செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இன்றைய உலகில் தகவல் தொடர்பு என்பது எதிர்நோக்கு என்னும் நம்பிக்கையை வழங்குவதற்குப் பதில், பயம், விரக்தி, தப்பெண்ணம், வெறுப்பு, கொள்கை வெறி மற்றும் பகைமை உணர்வுகளுக்கு வித்திடுவதாக உள்ளது எனவும் அதில் கவலையை வெளியிடும் திருத்தந்தை, தகவல் தொடர்பு என்பது வெறித்தனம் அற்றதாக இருக்க வேண்டும் என்பதற்கு அழைப்புவிடுத்து, இன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் இடம்பெறும் வார்த்தை தாக்குதல்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தைப்பொருள்களின் வியாபாரத் தந்திரத்திற்கு ஏற்ப புள்ளிவிவரங்களை வழங்கி, யதார்த்தத்தைப் பற்றிய மக்களின் கருத்தை மாற்றியமைக்கும் கவனச் சிதறல் முயற்சிகளும் சமூகத்தொடர்பு சாதனங்களால் நடத்தப்படுகின்றன என்ற உண்மை நிலையை தன் செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர் நோக்கு என்பது ஒரு மறைக்கப்பட்ட நற்பண்பு, அது விடாமுயற்சியும் பொறுமையும் கொண்டது என மேலும் தெரிவித்துள்ளார்.
புனித பேதுருவின் திருமடலில் எதிர் நோக்கு என்பது கிறிஸ்தவ சான்றோடும் தகவல் தொடர்போடும் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன் முதல் திருமடலில் புனித பேதுரு, ‘உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள்(3:15-16) என்று கூறுவதிலிருந்து, மூன்று கருத்துக்களாக, ‘உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்’, ‘நம் எதிர்நோக்குக் குறித்து விளக்கமளிக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’, மேலும், ‘நம் பதில் பணிவோடும் மரியாதையோடும் இருக்க வேண்டும்’ என்பவைகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் என உலக சமூகத் தொடர்பு தினச் செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
கத்தோலிக்கப் பத்திரிகைத்துறையின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் தி சேல்ஸ் அவர்களின் திருவிழாவான ஜனவரி 24ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இவ்வுலக தினச் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, சமூக தகவல் தொடர்பு என்பது நம்பிக்கைகளை வழங்கி உடன்பயணிகளாக நம்மை மாற்றவேண்டும், அச்சத்தை வழங்காமல் நம்பிக்கைகளை வழங்குவதாக அது இருக்க வேண்டும், சிறைகளில் வாழ்வோர், மிகவும் ஏழ்மை நிலையில் துன்புறுவோர் ஆகியோருக்குப் பணியாற்றவேண்டும் என்ற சமூகத்தொடர்புத்துறையின் கடமையையும் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கண்டுவரும் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு சமூகத்தொடர்பாளரும் தங்கள் உள்மனத்தை ஆராய்ந்து, தாங்கள் பணிபுரியும் மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும், மற்றும் நம்பிக்கையை பரப்புவர்களாகச் செயல்படவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.