ஸ்வீடன் நாட்டின் பள்ளியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பிப்ரவரி 05, புதன்கிழமையன்று, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார் .
பிப்ரவரி 04, செவ்வாய்க்கிழமையன்று, ஸ்சுவீடன் நாட்டின் ஓரேப்ரோவில் வயது வந்தோர் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்ட வேளை, இந்த இரங்கல் செய்தியை அந்நாட்டின் பிரதமர் உல்ஃப் கிரிஸ்டெர்சன் அவர்களுக்கு அனுப்பியுள்ள திருத்தந்தை, அதில் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது உடனிருப்பையும் செபத்தையும் உறுதிப்படுத்தியள்ளார்.
மேலும் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனில் இளைப்பாறுதல் அடையவும், துயரத்தில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆறுதல் பெறவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவேண்டல் செய்வதாக திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்தத் துயரமான நேரத்தில், அந்நாட்டு மக்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஒன்றிப்பு மற்றும் அமைதியின் கொடைகளை வழங்கிட இறைவேண்டல் செய்வதாகவும் திருத்தந்தை உறுதியளித்துள்ளார் .