செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீயவர் தீய வழியிலேயே அழிவர்!’ என்ற தலைப்பில் 52-வது திருப்பப்பாடலில் 4,5 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். பிறருக்கு நாம் என்னென்ன தீமைகளையெல்லாம் விளைவிக்க எண்ணுகிறோமோ அவையே நம் வாழ்வை அழித்துவிடும் என்பதை நம் நினைவில் நிறுத்தவும், நல்லது செய்து நல்ல மனிதர்களாக வாழவும் இறைவேண்டல் செய்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 6 முதல் 9 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது இறைஒளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்; மேலும், உன்னை எள்ளி நகையாடிக் கூறுவர்; ‛இதோ! பாருங்கள்; இவன் தான் கடவுளைத் தன் புகலிடமாய்க் கொள்ளாதவன்; தன் செல்வப் பெருக்கில் நம்பிக்கை வைத்தவன்; அழிவுச் செயலையே புகலிடமாய்க் கொண்டவன். நானோ, கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவமரக்கன்றுபோல் இருக்கின்றேன்; கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன். கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்; உம் அன்பரின் முன்னிலையில், உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்; இதுவே நன்று.’” (வச 6-9).
மன்னர் சவுலின் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் குறித்துத்தான் இந்தத் திருப்பாடலை தாவீது அரசர் எழுதினார் என்பது குறித்தும் தோயேகுவின் தீய செயல்கள் குறித்தும் நாம் தொடர்ந்து தியானித்து வருகிறோம். அவனது அழிவு குறித்து தாவீது கூறிய வார்த்தைகளைக் கடந்த வாரம் சிந்தித்தோம். இவ்வாரம் அதன் தொடர்ச்சியாக அமைகிறது. இன்றைய இறைவசனத்தில் முதலாவதாக, “நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்” என்று கூறுகின்றார் தாவீது அரசர். அதாவது தோயேகுவின் கொடும் அழிவைக் குறித்து நேர்மையாளர்கள் திகிலடைவர் என்கின்றார். தீயவர்களின் அழிவு எப்போதும் நேர்மையாளர்களுக்கும் நீதிமான்களுக்கும் திகிலையும் பேரச்சத்தையும் ஏற்படுத்தும். இந்தத் திகில் இன்னொரு எச்சரிக்கையையும் விடுகிறது. அதாவது, இறையச்சமின்றி, தீமையின் வழியில் வாழ்ந்தால் நமக்கும் இத்தகையதொரு நிலைதான் ஏற்படும் என்ற பாடத்தை படிப்பிக்கிறது என்பதன் அடிப்படையில்தான் திகிலடைவர் என்ற வார்த்தையை தாவீது அரசர் இங்கே பயன்படுத்துவதாக நாம் உணர்ந்துகொள்வோம்.
மேலும், “கடவுளைப் புகலிடமாகக் கொள்ளாதவன், தனது செல்வப்பெருக்கில் நம்பிக்கை வைத்தவன், அழிவுச் செயலையே தனது புகலிடமாகக் கொண்டவன் இவன்தான்” என்று கூறி, அந்தத் தீமையாளனின் வீழ்ச்சியைக் காணும் மக்கள் அனைவரும் அவனைக் குறித்து எள்ளிநகையாடுவர் என்று கூறுகின்றார் தாவீது அரசர். ஆக, தோயேகு எந்தளவுக்கு சர்வாதிகார மனம் கொண்டவனாக இருந்திருக்கின்றான் என்பதை தாவீதின் இந்த வார்த்தைகளிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இத்திருப்பாடலின் இறுதியில் தாவீது உரைக்கும் வார்த்தைகள் தான் எந்தளவுக்கு இறையச்சம் கொண்டவராக, கடவுளுக்குப் பிரமாணிக்கம் உள்ளவராக, தீமை செய்ய அஞ்சுபவராக, கடவுள் விரும்பும் நற்காரியங்களைத் துணிவுடன் நிறைவேற்றக்கூடியவராக வாழ்ந்திருக்கின்றார் என்பதை நமக்குக் காட்டுகின்றது. தாவீது இஸ்ரயேல் மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதும் 85 குருக்களை வெட்டி வீழ்த்திய தோயேகு வீழ்ந்தான் என்பதையும், சர்வாதிகாரமும் தீமையும் என்றும் நிலைத்திருக்க முடியாது என்பதையும் அவனது வரலாறு நமக்கு எடுத்தியம்புகின்றது.
சர்வாதிகாரிகளின் இறுதிக் காலம் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அது அவர்களது சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் மக்கள் புரட்சியால் தீர்மானிக்கப்படுகிறது. ஹிட்லர், முசோலினி, இடியாமின் என அதன் வரலாறு நீண்டுகொண்டே போகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய இராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை மக்கள் ஆக்கிரமித்த பிறகு அதிபர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எப்படி ஓட்டமெடுத்தார் என்பதை நாம் செய்தித் தாள்களில் வாசித்தோம். இன்றைய நாளில் முசோலினியின் முடிவு எப்படி அவருக்குத் திகிலையும் அவரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தது என்ற வரலாற்று நிகழ்வொன்றைப் பார்ப்போம். உரோமானியப் பேரரசை மீண்டும் உருவாக்கும் பெனிட்டி முசோலினியின் கனவு உரோமப் பேரரசு கலைந்தது போலவே ஏப்ரல் 25, 1945-இல் இடிந்து விழுந்தது. தெற்கில் இருந்து நேசநாட்டுப் படைகள் முற்றுகையிட வடக்கு இத்தாலியில் ஒவ்வொரு நகரங்களாகப் பாசிச எதிர்ப்புக் கட்சிக்காரர்கள் கைப்பற்றி வந்தனர். இதனால் முசோலினியின் அதிகாரம் ஆட்டம் கண்டது. 61 வயதான இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி தன்னை நவீன கால ஜூலியஸ் சீசராக கருதிக் கொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1922-இல் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். ஜெர்மனியின் நாஜி ஹிட்லரோடு அவர் கூட்டு வைத்துக் கொண்டார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி அணியில் நின்று போரிட்டார். ஆனால் அந்நேரத்தில் அவரது இத்தாலிய இராணுவம் காலாவதியாகி மோசமான நிலையில் இருந்தது. ஜூலை 1943-இல் சிசிலி மற்றும் உரோம் நகரின் மீது நேசநாட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கின. இதனால் இத்தாலியின் மன்னர் மூன்றாம் விக்டர் இம்மானுவேல், முசோலினியை அதிகாரத்திலிருந்து அகற்றி விட்டு வீட்டுக் காவலில் வைத்தார். ஆனால், 1943-இல் ஜெர்மனியின் நாஜி பாராட்ரூப் படைகள் முயற்சியால் அவர் மீட்கப்பட்டார். ஹிட்லர் தனது நண்பரான முசோலினியை இத்தாலியின் சோசலிச குடியரசின் தலைவராக அறிவித்தார். இந்த்த தலைமை செல்லுபடியான இடம் ஜெர்மனியின் நாஜி இராணுவம் ஆக்கிரமித்துள்ள வடக்கு இத்தாலியாகும். ஆனால் ஏப்ரல் 25, 1945-இல் நாஜி ஜெர்மனி தனது பிடியிலிருந்த வடக்கு இத்தாலியை இழந்தது. முசோலினி தனது கோட்டையான மிலானை இழந்து கொண்டிருந்தார். இதனால் மிலானின் கார்டினல் ஆல்ஃபிரடோ ஷூஸ்டரின் அரண்மனையில் பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்களின் குழு ஒன்றைச் சந்திக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்குத் தெரியாமல் ஜெர்மனியின் நாஜிக்கள் சரணடைவதற்கான பேச்சு வார்த்தைகளை தொடங்கியதை அறிந்து கோபம் கொண்டார். எனவே முசோலினி அரண்மனையை விட்டு வெளியேறி,1939-ஆம் ஆண்டு தனது காதலிக்கு பரிசாக வாங்கி ஆல்ஃபா ரோமியோ ஸ்போர்ட் காரில் தனது 33 வயது காதலி கிளாரா பெடாச்சியுடன் மிலான் நகரை விட்டு வெளியேறினார். இருவரும் ஜெர்மன் வீரர்கள் பாதுகாப்புடன் வடக்கு நோக்கி சுவிட்சர்லாந்தின் எல்லையை நோக்கிச் சென்றனர். முசோலினி ஒரு ஜெர்மன் பாணியிலான ஹெல்மெட் மற்றும் கோட் அணிந்திருந்தார். ஆனால் ஏப்ரல் 27 அன்று அவர் டோங்கோ ஏரிக்கரை நகரத்தில் பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்களிடம் மாறுவேடம் போட்டும் தப்பிக்க முடியவில்லை. 20 ஆண்டுகளாக முசோலினியின் புகைப்படம் சுவரொட்டி, சிலைகள் என அவரது ஆளுமை வழிபாட்டை உருவாக்கியிருந்தார்கள். செய்தித்தாள்களின் அன்றாடம் அவரது புகைப்படம் வெளிவரும்.
இப்படி இத்தாலி முழுவதும் அறியப்பட்டிருந்த இவரின் உருவப் படம் அனைவருக்கும் தெரியும். ஆகவே, அவர் மொட்டையடித்திருந்தாலும் பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்கள் அவரை அடையாளம் கண்டு பிடித்து விட்டனர். அவர்கள் முசோலினியையும் பெடாச்சியையும் கைது செய்தனர். ஜெர்மன் நாஜிக்கள் மீண்டும் முசோலினியை விடுவிக்க முயற்சிப்பார்கள் என்று அஞ்சி பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்கள் இருவரையும் தொலைதூர பண்ணை வீடு ஒன்றில் இரவோடு இரவாக மறைத்து வைத்தனர். அடுத்த நாள் முசோலினியும் பெடாச்சியும் அந்த பண்ணை வீட்டிலிருந்து அகற்றப்பட்டு, கோமோ ஏரியின் கரையில் உள்ள ஜியுலினோ டி மெஸ்ஸெக்ரா என்ற சிறிய கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே ஒரு வில்லா பெல்மொண்டே நுழைவாயிலில் உள்ள கல்சுவரில் இருவரும் நிற்க வைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் ஏப்ரல் 29 முந்தயை நாளில் முசோலினி, பெடாச்சி மற்றும் 14 சக பாசிஸ்டுகளின் உடல்கள் ஒரு டிரக்கில் வைக்கப்பட்டு பாசிச எதிர்ப்பு சக்திகளின் அடையாளமான மிலான் நகரின் பியாஸ்ஸேல் லொரேட்டோவில் குப்பைகள் போல கொட்டப்பட்டன. மக்கள் சர்வாதிகாரியின் சடலத்தின் மீது உதைத்தும், அடித்தும், எச்சில் துப்பியும், அழுகிய காய்கறிகளை வீசியும் அவமானப்படுத்தினர். மக்கள் கூட்டம் பின்னர் முசோலினி, பெடாச்சி மற்றும் பிற பாசிஸ்டுகளின் உடல்களை சதுக்கத்தின் ஒரு மூலையில் உள்ள பெட்ரோல் நிலைய சுவர்களுக்குக் கொண்டு சென்று கட்டி வைத்தது. இப்படியாக, சர்வாதிகாரியாக வாழ்ந்த முசோலியின் வாழ்வு முடிவடைந்தது.
ஒட்டுமொத்தமாக, நாம் தியானித்து முடித்திருக்கும் இந்தத் திருப்பாடல் நமக்கு உணர்த்தும் கருத்து, ஆயுதத்தை நம்புகிறவன் அந்த ஆயுத்தாலேயே மடிவான் என்பதுதான். அதாவது, தீமை செய்கிறவன் அந்தத் தீமையாலேயே அழிந்துபோவான். வஞ்சகன் தான் விரித்த வஞ்சக வலையிலேயே வீழ்ந்து மடிந்துபோவான். இதனை நன்கு உணர்ந்தபடியினால்தான் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் என்பது மதியற்றதனம் என்றும், போர் என்பது இறுதியில் தோல்வியைத்தான் தரும் என்றும், அடிக்கடி கூறிவருகிறார். வஞ்சகம் சூழ்ச்சிக்கும், சூழ்ச்சி போருக்கும், போர் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அழிவுக்கும் இட்டுச்செல்லும் என்பதுதான் வரலாறு நமக்குக் கற்பித்து வரும் பாடம். முதல் உலகப்போரும் இரண்டாம் உலகப்போரும் ஒருசில சர்வாதிகாரிகளின் செயல்களால் கோடிக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தது. ஜப்பானின் ஹிரோஹிமா, நாகசாகி ஆகிய இரண்டு இடங்களில் வீசப்பட்ட அணுகுண்டுகள் அப்பாவி மக்களை எந்தளவுக்குப் பாதித்தன என்பதையும், இன்றும் அதன் பாதிப்புகள் எப்படித் தொடர்கின்றன என்பதையும், நமது கால வரலாற்றின் பக்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே, நாம் கண்ட தோயேகுவைப் போல அப்பாவி மக்களின் அழிவுக்கு நாம் எப்போதும் காரணமாகாமல் இறையச்சத்தால் நம் வாழ்வைக் காத்துக்கொள்வோம். அதற்காக இந்நாளில் இறைவனிடம் இறைவேண்டல் செய்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்