மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்தும் தொழிலால் பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், இத்தீமைக்கு எதிராக நம் கடமைகளை உணர்ந்து, நம் குரல்களை ஒன்றிணைந்து எழுப்புவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார் .
இச்சனிக்கிழமை பிப்ரவரி 8ஆம் தேதி திருஅவையில் நினைவுகூரப்படும் புனித ஜோசபின் பகித்தாவின் திருவிழாவையொட்டி சிறப்பிக்கப்படும் இந்த விழிப்புணர்வு மற்றும் செப நாள் குறித்து, மனித கடத்தலுக்கு எதிராக செபிப்போம் என்ற ஹேஷ்டாக்குடன் டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.
இன்றைய உலகில் மனிதர்கள் வியாபாரப் பொருட்களாகக் கடத்தப்படுவதற்கு பாலியல் சுரண்டலே முக்கியக் காரணமாக, அதாவது மொத்தத்தில் 79 விழுக்காடாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெருமளவில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு இரண்டாவது காரணமாக கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்துவது இருப்பதாகவும், அது 18 விழுக்காடாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் வழி தெரிகிறது.
உலக அளவில் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் மக்களுள் 20 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் தெரியவந்துள்ளது.